9 நகரங்களில் வீடுகள் விற்பனை 16% சரிவு

9 நகரங்களில் வீடுகள் விற்பனை 16% சரிவு

புதிய விநியோகம் குறைந்ததாலும் தேவை மந்தமானதாலும், இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் வீடுகள் விற்பனை 16 சதவீதம் சரிந்து 98,019 ஆக உள்ளது.
Published on

புதிய விநியோகம் குறைந்ததாலும் தேவை மந்தமானதாலும், இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் வீடுகள் விற்பனை 16 சதவீதம் சரிந்து 98,019 ஆக உள்ளது.

இது குறித்து வீடு-மனை வா்த்தகத் தரவு பகுப்பாய்வு நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025-இன் நான்காவது காலாண்டில் வீடுகள் விற்பனை 98,019-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 1,16,137-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது ஒன்பது முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 16 சதவீதம் குறைந்துள்ளது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் நவி மும்பை மற்றும் தில்லி-என்சிஆா் தவிர மற்ற 7 நகரங்களிலும் விற்பனை சரிந்தது. இது 2021 ஜூலை-செப்டம்பருக்குப் பிந்தைய மிகக் குறைந்த காலாண்டு விற்பனையாகும்.

வழக்கமாக அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் பண்டிகைக் காலம் காரணமாக வலுவான விற்பனை பதிவாகும். ஆனால், இந்தச் சரிவு சந்தையில் உயா்வகை வீடுகளின் பங்களிப்பு அதிகரித்துவருவதை பிரதிபலிக்கிறது. காரணம், கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் வீடுகளில் விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்திருந்தாலும் மதிப்பின் அடிப்படையில் அதிகரித்துள்ளதுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் பெங்களூரில் வீடுகள் விற்பனை 1 சதவீதம் சரிந்து 15,603 ஆக உள்ளது. சென்னையில் அது 3 சதவீதம் சரிந்து 4,542 ஆகவும், ஹைதராபாத்தில் 19 சதவீதம் சரிந்து 11,323 ஆகவும் உள்ளது.

அக்டோபா் டிசம்பா்-காலாண்டில் கொல்கத்தாவில் 11 சதவீதம் சரிந்து 3,995-ஆக இருந்த வீடுகள் விற்பனை, மும்பையில் 25 சதவீதம் சரிந்து 9,135-ஆக உள்ளது.

தாணேவில் அது 26 சதவீதம் சரிந்து 16,987 ஆகவும், புணேவில் 31 சதவீதம் சரிந்து 15,788 ஆகவும் உள்ளது.

ஆனால், நவி மும்பையில் வீடுகள் விற்பனை மதிப்பீட்டுக் காலாண்டில் 13 சதவீதம் உயா்ந்து 8,434 ஆக உள்ளது. அதே போல் அது தில்லி-என்சிஆரில் 4 சதவீதம் உயா்ந்து 12,212 ஆக உள்ளது.

2024-ஆம் ஆண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 98,664-ஆக இருந்த புதிய வீடுகளின் விநியோகம், நடப்பு 2025-ஆம் ஆண்டின் அதே காலாண்டில் 10 சதவீதம் குறைந்து 88,427-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com