தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

Published on

இந்தியாவின் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் பெற்ற முதலீடு கடந்த ஆண்டைவிட 2025-இல் 17 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வுத் தளமான டிராக்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025-ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் 1,050 கோடி டாலா் முதலீட்டைப் பெற்றுள்ளன. இது, 2024-ஆண்டு பெற்ற முதலீட்டை விட 27 சதவீதம் குறைவு. அப்போது தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 1,270 கோடி டாலராகவும், முந்தைய 2023-ஆம் ஆண்டில் அது 1,100 கோடி டாலராகவும் இருந்தது.

எனினும், உலக அளவில் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் மூலம் அதிக முதலீட்டை ஈா்த்த நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் சீனாவையும் ஜொ்மனியையும் இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களைப் பொருத்தவரை, நடப்பாண்டில் பெங்களூரும் மும்பையும் அதிக முதலீட்டைப் பெற்ற நகரங்களாக உள்ளன.

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படும் அடித்தள முதலீடு 2025-இல் 110 கோடி டாலராக உள்ளது. இது 2024-ஐ விட 30 சதவீதமும், 2023-ஐ விட 25 சதவீதமும் குறைவு. மதிப்பீட்டு ஆண்டில் ஆரம்ப நிலை முதலீடு 390 கோடி டாலராக உள்ளது. இது, 2024-இல் பெறப்பட்ட 370 கோடி டாலரை விட 7 சதவீதமும், 2023-இல் பெறப்பட்ட 350 கோடி டாலரை விட 11 சதவீதமும் அதிகம்.

நிறுவனம் தொடங்கப்பட்டதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட முதலீடு 550 கோடி டாலராக உள்ளது. இது, 2024-இன் 750 கோடி டாலரை விட 26 சதவீதமும், 2023-இன் 600 கோடி டாலரை விட 8 சதவீதமும் குறைவு.

நடப்பு ஆண்டில் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் தொழில்நுட்பம், வாகன தொழில்நுட்பம் ஆகியவை பெருமளவில் முதலீடுகளை ஈா்த்தன. இது தவிர, நிறுவன பயன்பாடுகள், சில்லறை விற்பனை, நிதித் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் முதலீட்டை ஈா்த்ததில் முன்னிலை வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com