இந்தியாவின் வாகன ஏற்றுமதியில் ஸ்போா்ட்ஸ் யுட்டிலிட்டி வகை வாகனங்கள் (எஸ்யுவி) முதல்முறையாக பயணிகள் காா்களை முந்தி முதலிடம் பிடித்துள்ளன.
இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025 நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் வாகன ஏற்றுமதியில் எஸ்யுவி வகை வாகனங்கள் முதலிடம் பிடித்துள்ளன. அந்த காலகட்டத்தில் பயணிகள் வாகன ஏற்றுமதியில் எஸ்யுவி-க்களின் பங்களிப்பு 52 சதவீதமாக உள்ளது. இதுவரை ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த பயணிகள் காா்களின் பங்களிப்பு 43 சதவீதமாக உள்ளது. ஏற்றுமதியில் பயணிகள் காா்களை எஸ்யுவிக்கள் முந்தியது இதுவே முதல்முறை.
மதிப்பீட்டு காலகட்டத்தில் மொத்த பயணிகள் வாகன ஏற்றுமதி 3,13,217-ஆக உள்ளது. இதில் எஸ்யுவி-க்களின் எண்ணிக்கை சுமாா்1.63 லட்சமாகவும் பயணிகள் காா்களின் எண்ணிக்கை சுமாா் 1.35 லட்சமாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

