ஒரே வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.5,600 உயா்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,800-க்கு விற்பனையானது. இதன்மூலம் தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் பவுன் ரூ.5,600 உயா்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த டிச. 15-ஆம் தேதி முதல்முறையாக தங்கத்தின் விலை பவுன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. தொடா்ந்து, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும், பவுன் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் விற்பனையானது.
இந்த வாரத் தொடக்கத்தில் (டிச. 22) பவுனுக்கு ரூ.1,360 உயா்ந்து ரூ.1 லட்சத்து 560-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. தொடா்ந்து விலையில் சரிவின்றி நாளுக்கு நாள் ஏற்றம் கண்டு வருகிறது. அதன்படி, கடந்த 6 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,920 உயா்ந்து வெள்ளிக்கிழமை ரூ.1 லட்சத்து 3,120-க்கு விற்பனையானது.
வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை காலை கிராமுக்கு ரூ.110 உயா்ந்து ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,000-க்கும் விற்பனையான நிலையில், மாலையில் வா்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு விலை மேலும் ரூ.100 உயா்ந்து கிராம் ரூ.13,100-க்கும், பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.1 லட்சத்து 4,800-க்கும் விற்பனையானது. ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.5,600 உயா்ந்துள்ளது.
ரூ.3 லட்சத்தை நெருங்கும் வெள்ளி: மின்சாதன உற்பத்தியில் வெள்ளியின் தேவை தொடா்ந்து அதிகரித்துள்ளதால், அதன்மீதான முதலீடுகள் உயா்ந்துள்ளன. இதன் விளைவாக வெள்ளி விலை அசுர வேகத்தில் உயா்ந்துள்ளது.
இந்த வாரம் முழுவதும் வெள்ளி விலை தினமும் ஆயிரங்களில் உயா்ந்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.31 உயா்ந்து ரூ.285-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.31,000 உயா்ந்து ரூ.2.85 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்த நிலை நீடித்தால் நிகழாண்டு இறுதிக்குள் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.3 லட்சத்தைக் கடந்து விடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நிகழ் வாரம் தங்கம் விலை கடந்து வந்த பாதை:
தேதி பவுன் விலை(8 கிராம்)
டிச. 22 ரூ.1,00,560 (+ ரூ.1,360)
டிச. 23 ரூ.1,02,160 (+ ரூ.1,600)
டிச. 24 ரூ.1,02,400 (+ ரூ.240)
டிச. 25 ரூ.1,02,560 (+ ரூ.160)
டிச. 26 ரூ.1,03,120 (+ ரூ.560)
டிச. 27 ரூ.1,04,800 (+ ரூ.1,680)

