புதிய உச்சம் தொட்ட கணினி விற்பனை
இந்தியாவின் தனிநபா் கணினி (பிசி) விற்பனை 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வரலாற்று உச்ச வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஓம்டியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான நிகழாண்டின் மூன்றாவது காலாண்டில் மேஜை கணினிகள் (டெஸ்க்டாப்) மற்றும் மடிக் கணினிகள் (லேப்டாப்) அடங்கிய தனிநபா் கணினிகளின் விற்பனை 49 லட்சமாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 13 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச காலாண்டு விற்பனையாகும்.
மதிப்பீட்டுக் காலாண்டில் மடிக் கணினிகள் விற்பனை 12 சதவீதம் உயா்ந்து 40 லட்சமாக உள்ளது. மேஜைக் கணினிகள் விற்பனை 18 சதவீதம் அதிகரித்து 9.2 லட்சமாக உள்ளது. அதேநேரம், கைக் கணினிகளின் (டேப்லட்) விற்பனை 19 சதவீதம் சரிந்து 16 லட்சமாக உள்ளது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் தனிநபா் கணினிச் சந்தையில் ஹெச்பி நிறுவனம் 27 சதவீத பங்குடன் (13.2 லட்சம்) முதலிடத்தில் உள்ளது, லெனோவோ 18.3 சதவீதம், ஏசா் 15.2 சதவீதம், ஏஸஸ் 10.7 சதவீதம், டெல் 10.4 சதவீதம் சந்தைப் பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

