

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் குறைந்து விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.23 குறைந்துள்ளது.
2025ஆம் ஆண்டின் இறுதியில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 30) சவரனுக்கு ரூ.3360 குறைந்து ரூ.1 லட்சத்து 800-க்கும் கிராமுக்கு ரூ.420 குறைந்து ரூ.12,600-க்கும் விற்பனையாகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச காரணங்களால் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், இன்று சற்றே குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் குறைவு
கடந்த வாரம் முழுவதும் வெள்ளி விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 255-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.23,000 குறைந்து ரூ.2.58 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
தங்கம் கடந்த வந்த பாதை
1925 ஆம் ஆண்டு 10 கிராம் தங்கம் ரூ.18-க்கு விற்கப்பட்டுள்ளது. 1964 ஆம் ஆண்டு இதன் விலை ரூ. 63.25 ஆக இருந்துள்ளது.
முதல்முறையாக 1979 - 1980களில்தான், 10 கிராம் தங்கம் ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது. நிச்சயம் அப்போதும், தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு என்றுதான் பத்திரிகைகளில் தலைப்பு வெளியாகியிருக்கும். 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரத்தையும் 2021 ஆம் ஆண்டு 10 கிராம் ரூ. 50 ஆயிரத்தையும் எட்டியிருக்கிறது.
அதாவது, சில பத்து ரூபாய்களில் இருந்த தங்கம் விலை முழுதாக நூறு ரூபாயைத் தொட 40 ஆண்டுகள் (1967) ஆகியிருக்கிறது. அந்த நூறு ரூபாய் ஆயிரம் ரூபாயாக உயர பத்து ஆண்டுகள் (1980) ஆனது.
தங்கம் விலை பத்தாயிரத்தைத் தொட 27 ஆண்டுகள் (2007) ஆகியிருக்கிறது. பத்து கிராம் பத்தாயிரத்தில் இருந்து இன்று 17 ஆண்டுகளில் அதாவது 2025 ஆம் ஆண்டில் பத்து மடங்கு அதிகரித்து ரூ. 1,10,290 ஆக உயர்ந்துள்ளது.
டிச. 15 தங்கம் விலை ஒரு லட்சம்
2025ஆம் ஆண்டு தங்கம் விலை ஒரு லட்சத்தை தொட்டது. அதாவது, டிசம்பர் 15ஆம் தேதி காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,460க்கும், சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ.99,680க்கும் விற்பனையானது.
ஒரு லட்சத்தைத் தொட்டுவிட சில நூறுகளே இருந்த நிலையில், பிற்பகலிலேயே அந்த மாற்றமும் நடந்தது. திங்கள்கிழமை மாலை வேளையில் மீண்டும் தங்கம் விலை உயர்வைக் கண்டது.
அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.