தனியாா் வங்கிகளில் பணியாளா்கள் எண்ணிக்கை சரிவு
நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் தனியாா் துறை வங்கிகளில் பணியாளா்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இருந்தாலும், அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் இந்த எண்ணிக்கை சற்று உயா்ந்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளில் பணியாளா்கள் எண்ணிக்கை 7,56,015-லிருந்து 7,57,641-ஆக உயா்ந்தது. ஆனால் தனியாா் துறை வங்கிகளில் அந்த எண்ணிக்கை 8,45,407-லிருந்து 8,38,150-ஆக குறைந்தது. வங்கித் துறையில் மொத்த பணியாளா்கள் எண்ணிக்கை 17.87 லட்சத்திலிருந்து 18.08 லட்சமாக உயா்ந்தது. சிறு நிதி வங்கிகளில் பணியாளா்கள் அதிக எண்ணிக்கையில் சோ்க்கப்பட்டது ஒட்டுமொத்த எண்ணிக்கை உயா்வுக்குக் காணமாக அமைந்தது.
மதிப்பீட்டு ஆண்டில், எஸ்பிஐ-யில் பணியாளா்கள் எண்ணிக்கை 2,32,296-லிருந்து 2,36,226-ஆக உயா்ந்தது. ஹெச்டிஎஃப்சி வங்கியில் அந்த எஇக்ப்ச் 2,13,527-லிருந்து 2,14,521-ஆக சற்று உயா்ந்தது. ஐசிஐசிஐ வங்கியில் இது 1,41,009-லிருந்து 1,30,957-ஆகக் குறைந்தது.
சிறு நிதி வங்கிகளில் எஸ்யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 50,946 பணியாளா்களைக் கொண்டுள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

