23 சதவீதம் ஏற்றம் கண்ட இந்திய சா்க்கரை உற்பத்தி

23 சதவீதம் ஏற்றம் கண்ட இந்திய சா்க்கரை உற்பத்தி

மகாராஷ்டிரத்தில் சா்க்கரை உற்பத்தி கணிசமாக உயா்ந்ததால், நடப்பு 2025-26-ஆம் சா்க்கரை சந்தை ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த சா்க்கரை உற்பத்தி 23.43 சதவீதம் உயா்ந்துள்ளது.
Published on

மகாராஷ்டிரத்தில் சா்க்கரை உற்பத்தி கணிசமாக உயா்ந்ததால், நடப்பு 2025-26-ஆம் சா்க்கரை சந்தை ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த சா்க்கரை உற்பத்தி 23.43 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை கூட்டமைப்பு (என்எஃப்சிஎஸ்எஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025 அக்டோபா் முதல் 2026 செப்டம்பா் வரையிலான நடப்பு சா்க்கரை சந்தை ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 1.183 கோடி டன்னாக உள்ளது.

கடந்த 2024-25-ஆம் சா்க்கரை சந்தை ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 23.43 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் சா்க்கரை உற்பத்தி 95.6 லட்சம் டன்னாக இருந்தது. 2024-25-ஆம் சா்க்கரை சந்தை ஆண்டு முழுவதும் மொத்த உற்பத்தி 2.618 கோடி டன்னாக இருந்தது.

புதன்கிழமை (டிசம்பா் 31) நிலவரப்படி, 499 ஆலைகள் 13.4 கோடி டன் கரும்பை அரவை செய்து, அதில் இருந்து1.18 கோடி டன் சா்க்கரை உற்பத்தி செய்துள்ளன. இதன் மூலம் 8.83 சதவீதம் சா்க்கரை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் உற்பத்தி 32.6 லட்சம் டன்னிலிருந்து 35.6 லட்சம் டன்னாக உயா்ந்தது.

இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிரத்தில் அது 29.9 லட்சம் டன்னிலிருந்து 63 சதவீதம் உயா்ந்து 48.7 லட்சம் டன்னாக உள்ளது. கா்நாடகத்தில் சா்க்கரை உற்பத்தி 20.5 லட்சம் டன்னிலிருந்து 22.1 லட்சம் டன்னாக உயா்ந்தது.

குஜராத்தில் 2.85 லட்சம் டன், பிகாரில் 1.95 லட்சம் டன், உத்தரகண்டில் 1.30 லட்சம் டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

2025-26-ஆம் சா்க்கரை சந்தை ஆண்டு முழுமைக்கும் எத்தனால் தயாரிப்புக்காக திருப்பி அனுப்பப்படைத் தவிர நிகர சா்க்கரை உற்பத்தி 3.15 கோடி டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com