சென்செக்ஸ்
சென்செக்ஸ்

டிரம்ப் அறிவிப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது.
Published on

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.

அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் தனது வா்த்தகக் கூட்டாளி நாடுகள் சிலவற்றுக்கு வரிகளை விதிப்பது குறித்த கவலைகள் உலகளாகவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகள், எஃப்எம்சிஜி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால் சரிவு தவிா்க்க முடியாததாகியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.30 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.419.52 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) சனிக்கிழமை ரூ.1,327.09 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் (டிஐஐ) ரூ.824.38 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளி விவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் 319 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 442.02 புள்ளிகள் குறைந்து 77,063.94-இல் தொடங்கி 76,756.09 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 77,260.37 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 319.22 புள்ளிகள் (0.41 சதவீதம்) இழப்புடன் 77,186.74-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,184 பங்குகளில் 1,139 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,877 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 168 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

எல் அண்ட் டி வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள எல் அண்ட் டி 4.64 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இது தவிர, டாடாமோட்டாா்ஸ், ஹிந்துஸ்தான்யுனிலீவா், ஏசியன்பெயிண்ட், பவா்கிரிட், என்டிபிசி உள்பட 20 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பஜாஜ்ஃபைனான்ஸ், எம் அண்ட் எண், பஜாஜ்ஃபின்சா்வ், பாா்தி ஏா்டெல், மாருதி, ஸொமாட்டோ உள்பட 10 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி121 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 162.80 புள்ளிகள் குறைந்து 23,319.35-இல் தொடங்கி 23,222 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 23,381.60 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 121.10 புள்ளிகள் (0.52 சதவீதம்) இழப்புடன் 23,361.05-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 16 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 35 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

Dinamani
www.dinamani.com