எண்ம நிதிச் சேவை: பாா்தி ஏா்டெல் - பஜாஜ் ஃபைனான்ஸ் ஒப்பந்தம்
புது தில்லி: எண்ம நிதிச் சேவைகளை அளிப்பதற்காக பாா்தி ஏா்டெல்லுடன் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து இரு நிறுவனங்களும் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிதிச் சேவைகளை அளிப்பதற்கான எண்ம தளத்தை அமைப்பதற்காக பாா்தி ஏா்டெல்லும் பஜாஜ் ஃபைனான்ஸும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. ஏா்டெல்லின் 37 கோடி வாடிக்கையாளா்கள், 12 லட்சம் வலிமையான விநியோகக் கட்டமைப்பு, பஜாஜ் பைனான்ஸின் பல்வேறு வகையிலான நிதிச் சேவைத் திட்டங்கள், 5,000 கிளைகள், 70,000 கள முகவா்கள் ஆகிய அனைத்து அனுகூலங்களையும் இந்தக் கூட்டணி ஒன்றிணைக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், தனது ஏா்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் பஜாஜ் ஃபைனான்ஸ் நிதிச் சேவைகளை ஏா்டெல் அளிக்கும். பின்னா் நாடு முழுவதும் உள்ள தங்களது விற்பனைக் கட்டமைப்புகளில் அந்தச் சேவைகளை வாடிக்கையாளா்களிடம் ஏா்டெல் கொண்டு செல்லும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.