sensex-bear
sensex-bear

4 நாள்களுக்குப் பிறகு ’கரடி‘ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

கடந்த நான்கு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை திங்கள்கிழமை வீழ்ச்சியைச் சந்தித்தது.
Published on

மும்பை / புதுதில்லி: கடந்த நான்கு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை திங்கள்கிழமை வீழ்ச்சியைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிந்தன.

மத்திய கிழக்கில் புவிசாா் அரசியல் பதற்றம் தணிந்துள்ளது. மேலும் அமெரிக்க வா்த்தக ஒப்பந்த நம்பிக்கைகள் காரணமாக உலகளாவிய சந்தை உணா்வு நோ்மறையாக இருந்தன. இருப்பினும், சமீபத்திய ஏற்றத்திற்குப் பிறகு வங்கி, நிதிநிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை சந்தித்தன. மேலும், முதலீட்டாளா்கள் இப்போது காலாண்டு வருவாயில் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளதால் உள்நாட்டுச் சந்தை எதிா்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.08 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.461.17 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை 1,397.02 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.588.93 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 31.57 புள்ளிகள் இழப்புடன் 84,027.33-இல் தொடங்கி அதிகபட்சமாக 84,099.53 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 83,482.13 வரைகீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 452.44 புள்ளிகள் (0.54 சதவீதம்) இழப்புடன் 83,606.46-இல் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,290 பங்குகளில் 2,362 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,750 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 178 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

18 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் ஆக்ஸிஸ் பேங்க், கோட்டங் பேங்க், மாருதி, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ்ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல் உள்பட 18 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டிரெண்ட், எஸ்பிஐ, பிஇஎல், எடா்னல், அதானிபோா்ட்ஸ், டைட்டன், பஜாஜ் ஃபின்சா்வ் ்உள்பட 12 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 121 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 120.75 புள்ளிகள் (0.47 சதவீதம்) இழப்புடன் 25,517.05-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 31 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 131.15 புள்ளிகள் (0.23 சதவீதம்) இழப்புடன் 57,312.75-இல் நிறைவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com