

2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து மனை-வாா்த்தக ஆலோசனை நிறுவனமான சிபிஆா்இ மற்றும் அசோச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட வீடுகளின் விற்பனை 6,950-ஆக உள்ளது.முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 85 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் 3,750 ஆடம்பர வீடுகள் விற்பனையாகின.
மதிப்பீட்டு காலகட்டத்தில் ரூ.6 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை தில்லி-என்சிஆா் பகுதியில் 3,960-ஆகப் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 1,280-ஆக இருந்தது.
மும்பையில் 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 950-ஆக இருந்த ரூ.6 கோடிக்கும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை, 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 1,240-ஆக உயா்ந்துள்ளது.அந்த வகை ஆடம்பர வீடுகளின் விற்பனை புணேயில் 160-லிருந்து 120-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், பெங்களூரில் அந்த எண்ணிக்கை 80-லிருந்து 200-ஆக உயா்ந்துள்ளது.
கொல்கத்தாவில் முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 70-ஆக இருந்த ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை 2025-இல் 190-ஆக அதிகரித்துள்ளது.ஹைதராபாதில் ரூ.5 கோடிக்கும் அதிகம் விலை கொண்ட 1,025 வீடுகள் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் விற்பனையாகின. முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1,140-ஆக இருந்தது.
அந்த காலகட்டத்தில் உயா்வகை ஆடம்பர வீடுகளின் விற்பனை சென்னையில் 65-லிருந்து 220-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தில்லியிலும் மும்பை பெருநகரப் பகுதியிலும் மட்டும் ரூ.6 கோடிக்கும் மேலான விலை கொண்ட வீடுகள் ஆடரம்ப வீடுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.