அனில் அம்பானி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்த காரணம் என்ன?

அனில் அம்பானி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கான பின்னணி என்ன? என்பது பற்றி...
anil ambani
அனில் அம்பானி
Published on
Updated on
3 min read

புது தில்லி: தொழில்களில் நஷ்டம், கடன் என பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான 110 இடங்களில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருக்கிறது.

யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.3,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், பண மோசடி வழக்கில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய 35 வளாகங்கள், 50 நிறுவனங்கள், 25 தனிநபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை காலை சோதனை நடத்தியிருக்கிறது.

கடன்பெற்று திரும்ப செலுத்தாததால், மோசடியாளர் என அனில் அம்பானியையும், மோசடி கடன் என ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளித்த கடனையும் அடையாளப்படுத்தி, பாரத ஸ்டேட் வங்கி நேற்று அறிவித்திருந்த நிலையில், தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை இன்று இந்த சோதனையை நடத்தியிருக்கிறது.

அமலாக்கத் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், 2017 - 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ரூ.3000 கோடியை திருப்பிவிடப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட ஒரு மோசடியை கண்டுபிடித்துள்ளது. யெஸ் வங்கியிடமிருந்து, ரிலையன்ஸ் குழுமத்துக்கு கடன் தொகை வழங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்புதான், அந்த வங்கியின் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு லஞ்சத் தொகையானது அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்றும் சந்தேகிக்கிறது.

யெஸ் வங்கியும் ராணா கபூர் விசாரணையும்

இந்த வழக்கானது இன்று நேற்றல்ல, கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி, ஒரு மிகப்பெரிய விசாரணையின் அடிப்படையில் தொடுக்கப்பட்டது. அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் - 9 நிறுவனங்கள் கிட்டத்தட்ட ரூ.12,800 கோடி கடன் வாங்கியது உள்பட - யெஸ் வங்கியின் அப்போதைய பிரமோட்டர் ராணா கபூருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தது. அப்போது பண மோசடி வழக்கில் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின்போது, இதேப்போன்று எஸ்ஸெல், டிஎச்எஃப்எல், ஜெட் ஏர்வேஸ், இந்தியாபுல்ஸ் நிறுவனங்களும், வங்கி ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதர வங்கிகளுடன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மோசடி

கடந்த ஜூன் மாதம், பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) மற்றும் அதன் பிரமோட்டர்களின் கடன்களை "மோசடி" என்று வகைப்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு அறிவித்தது. இந்த அறிவிப்பில், ரூ.2,227 கோடி நிதி அடிப்படையிலான கடன்களும், ரூ.786 கோடி நிதி அல்லாத கடன்களும் அடங்கும்.

இந்தக் குற்றச்சாட்டில், கடன் தொகையை வேறு அமைப்புகளுக்கு அனுப்புதல், தவறாகப் பயன்படுத்துதல், குழும நிறுவனங்களிடையே சுழற்சியான முறையில் பரிவர்த்தனையை மேற்கொள்ளுதல், மேலும் அறியப்படாத பல முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதாகக் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் தரப்பில் நடத்தப்பட்ட கணக்குத் தணிக்கையில், ஆர்காம் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், எஸ்பிஐ மட்டுமல்லாமல் பல்வேறு வங்கிகளிடமிருந்து ரு.31,500 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதில், ரூ.13,667 கோடியை, ஏற்கனவே நிறுவனம் வாங்கியிருந்த கடன்களைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்தியிருக்கிறது. மேலும் ரூ.12,692 கோடியை, குழுமத்துடன் தொடர்புடைய பிற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியிருக்கிறது. தொடர்ந்து ரூ.6,265 கோடி, எந்த தொடர்பும் இல்லாத காரணங்களுக்காக செலவிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனரா வங்கி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர்காம்) நிறுவனத்தின் மற்றொரு கடன் வழங்குநரான கனரா வங்கியும் முன்பு இதேப்போன்று, அனில் அம்பானி கடன் கணக்கை மோசடி எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், ஜூலை 2025 இல், அது பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இதன் மூலம், ஒரு கடன் கணக்குக்கு, ஒவ்வொரு வங்கியும் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் முரண் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

இந்த நிலையில்தான், கடந்த 2024ஆம் ஆண்டு, ஒரு கடன் கணக்கை மோசடி என அறிவிக்கும்முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை ஆர்பிஐ திருத்தியது. கடன் வழங்கும் வங்கிகள், ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளும் போக்கை மாற்றும் வகையில் இந்த திருத்தம் அமைந்திருந்தது.

மோசடி என அறிவித்தால் என்னவாகும்?

ஒரு கணக்கு மோசடி என அறிவிக்கப்பட்டால், கடன் வாங்கியவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து புதிய கடனைப் பெறத் தகுதியற்றவராகிறார்.

மோசடி கணக்கு என அறிவித்ததோடு, சிபிஐயிடம் புகார் அளிக்கவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனில் அம்பானி, குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்.

அமலாக்கத் துறை விசாரணை

யெஸ் வங்கியின் மோசடி வழக்கில், அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகளுக்கு கடன் தொகையை திருப்புதல், நிலுவைகளைத் திரும்பப் பெறுவதில் இருந்த அலட்சியம் போன்றவைதான் காரணம் என அமலாக்கத் துறை கூறுகிறது.

யெஸ் வங்கி, கடன் வழங்குவதற்கு, அதன் பிரமோட்டர்களுக்கு, லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

சிபிஐ, என்எச்பி, செபி, என்எஃப்ஆர்ஏ, பரோடா வங்கி உள்ளிட்ட பிற ஒழுங்குமுறை நிறுவனங்களின் தரவுகளும், அமலாக்கத் துறை விசாரணைக்கு பலம் சேர்க்கின்றன.

அடுத்து என்ன நடக்கும்?

கடன் தொகையை திசைதிருப்பிதுல், கடன் பெற லஞ்சம் வழங்கியது தொடர்பாக ஆதாரங்களைத் திரட்ட அமலாக்கத் துறை முயற்சி எடுக்கும்.

எஸ்பிஐ வங்கி மற்றும் சிபிஐ முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருப்பது போன்றவை குற்றவியல் வழக்குகளைத் தொடர வழிவகுக்கும். இனி நிறுவனங்கள் பெறும் கடன்கள் மீதான கவனம் அதிதீவிர ஆய்வுக்கு உள்படுத்தப்படும்.

ஏற்கனவே, யெஸ் வங்கியின் மோசடி விசாரணையில், ரூ.3,000 கோடி கடன் தொகை திசை திருப்புதல் முக்கியத்துவம் பெறும். அனில் அம்பானி உள்பட, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் மிகப்பெரிய தொகையை கடன் பெற்ற நிறுவனங்களும் விசாரணை வளையத்துக்குள் வரும். இவை அனைத்தும், வங்கி மற்றும் நிதித் துறை தொடர்பான வழிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்பதற்கான சமிக்ஜையாக மாறியிருக்கிறது.

Summary

The Enforcement Directorate (ED) on Thursday 110 place linked to Anil Ambani’s Reliance Group under Section 17 of the Prevention of Money Laundering Act (PMLA) in connection with an alleged Rs 3,000 crore loan scam involving Yes Bank.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com