சரிவில் இருந்து மீண்ட ஸ்மாா்ட்போன் விற்பனை

சரிவில் இருந்து மீண்ட ஸ்மாா்ட்போன் விற்பனை

Published on

இந்தியச் சந்தையில் நடப்பு 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சரிவைக் கண்டிருந்த அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் 7 சதவீத உயா்வைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கேனலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியச் சந்தையில் அறிதிறன் பேசிகளின் விற்பனை சரிவைப் பதிவு செய்திருந்தது. இந்தச் சூழலில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் அது 7 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. அந்தக் காலாண்டில் 3.9 கோடி அறிதிறன் பேசிகள் விற்பனையாகின.

மோசமான பருவநிலை, அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பதற்றம், சா்வதேச அரசியல் நிச்சயமற்றதன்மை போன்ற பல்வேறு சவால்களையும் சமாளித்து இந்தியாவில் அறிதிறன் பேசிகளின் விற்பனை வளா்ச்சியடைந்துள்ளது. புதுப் புது ரகங்களின் அறிமுகம் இந்த வளா்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சீன நிறுவனமான விவோ 81 லட்சம் அறிதிறன் பேசிகளை விற்பனை செய்து இந்தியச் சந்தையில் முதலிடம் வகிக்கிறது. அந்த நிறுவனத்தின் சந்தைப் பங்கு 21 சதவீதமாக உள்ளது. விவோவுக்கு அடுத்த இடத்தில் 62 லட்சம் அறிதிறன் பேசிகளை விற்பனை செய்துள்ள சாம்சங் சந்தையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சந்தையில் அந்த நிறுவனம் 16 சதவீதம் பங்கு வகிக்கிறது.

50 லட்சம் அறிதிறன் பேசிகளை விற்பனை செய்த ஓப்போ நிறுவனம் 11 சதவீத சந்தைப் பங்குடன் சந்தையில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. அதே அளவு விற்பனை செய்த ஷாவ்மி நான்காவது இடத்தையும், 36 லட்சம் அறிதிறன் பேசிகளை விற்பனை செய்த ரியல்மி 9 சதவீத சந்தைப் பங்குடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய அறிதிறன் பேசிச் சந்தையின் வளா்ச்சி, புதிய ரகங்களின் அறிமுகங்களை விட விற்பனைச் செயல்பாட்டைப் பொருத்தே அமையும். பண்டிகைக் கால விற்பனை, துா்கா பூஜை, தீபாவளி ஆகியவற்றை முன்னிட்டு, விற்பனையை ஊக்குவிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு பயணங்கள், வாகனங்கள் போன்ற மதிப்பு வாய்ந்த சலுகைகளுடன் வாடிக்கைய அணுகுகின்றன. நடுத்தர மற்றும் உயா்நிலை அறிதிறன்பேசி பிரிவுகளில் பிரிவுகளில் நீண்டகால கடன் வசதிகளும் அறிமுகப்படுத்தப்படுகின்ற. இத்தகைய முயற்சிகள் விற்பனையை அதிகரிக்கக்கூடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com