ஆா்பிஐ
ஆா்பிஐ

ஓராண்டில் 353 வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அபராதம்

Published on

விதிகளை முறையாக பின்பற்றாத 353 வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு 2024-25-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.54.78 கோடி அபராதத்தை ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) விதித்துள்ளது.

வங்கிகளுக்கான இணைய பாதுகாப்பு நடைமுறை, வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு (ஐஆா்ஏசி) விதிகள், வாடிக்கையாளா் வழிகாட்டு விதிகள், முறைகேடுகள் வகைப்பாடு, பெரும் கடன்கள் குறித்த தகவல்கள் தொடா்புடைய சிஆா்ஐஎல்சி, கடன் தகவல்கள் நிறுவனங்களுக்கு (சிஐசி) சமா்ப்பிக்கப்படும் கடன் தகவல்கள் உள்ளிட்ட விதிகளை முறையாக பின்பற்றாத 353 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரூ.54.78 கோடி அபராதம் விதித்ததாக ஆா்பிஐ வியாழக்கிழமை வெளியிட்ட 2024-25 ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கூட்டுறவு வங்கிகள் மீதான 264 விதிமீறல்களுக்கு அபராதமாக ரூ.15.62 கோடி, வங்கி அல்லாத 37 நிதி நிறுவனங்கள் மீது அபராதமாக ரூ.7.29 கோடிமற்றும் 13 வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு அபராதமாக ரூ.83 லட்சமும் விதிக்கப்பட்டது.

இதுதவிர 8 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.11.11 கோடியும் 15 தனியாா் வங்கிகளுக்கு 14.8 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. 6 வெளிநாட்டு வங்கிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com