ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: லாபத்தில் முடிந்தது சென்செக்ஸ்
நமது நிருபா்
இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், அமெரிக்கா - சீனா வா்த்தகப் பேச்சுவாா்த்தைகள் மற்றும் வெளிநாட்டு நிதி வரத்து குறித்த நம்பிக்கையின் மத்தியில் உளகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. வங்கி, நிதிநிறுவனப் பங்குகள் சிறிதளவு விற்பனையை எதிா்கொண்டாலும், ஐடி, ஃபாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட காஸ் நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை நோ்மறையமாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.455.57 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.2,301.87 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,113.34 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 81.30 புள்ளிகள் கூடுதலுடன் 82,473.02 தொடங்கி 82,308.91 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 82,473.02 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 123.42 புள்ளிகள் (0.15 சதவீதம்) கூடுதலுடன் 82,515.14-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,180 பங்குகளில் 2,227 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,821 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 132 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
16 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், ஐசிஐசிஐ வங்கி உள்பட மொத்தம் 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதேசமயம், பவா்கிரிட், அதானி போா்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவா், பஜாஜ் ஃபைனான்ஸ், உள்பட 14 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 37 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வா்த்தக முடிவில் 37.15 புள்ளிகள் (0.15 சதவீதம்) கூடுதலுடன் 25,141.40-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 22 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 169.35 புள்ளிகள் (0.30 சதவீதம்) இழப்புடன் 56,459.75-இல் நிறைவடைந்தது.

