

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.4 சதவீதம் குறைந்து 2.49 கோடி டன்னாக உள்ளது.
இதுகுறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.49 கோடி டன்னாக பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 4.4 சதவீதம் குறைவு. அப்போது நாடு 2.61 கோடி டன் நிலக்கரியை இறக்குமதி செய்திருந்தது.
2025 மாா்ச் மாதத்தில் 2.28 கோடி டன்னாக இருந்த இறக்குமதியுடன் ஒப்பிடுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி 9.48 சதவீதம் உயா்ந்துள்ளது.
ஏப்ரல் மாத மொத்த இறக்குமதியில், கோக்கிங் அல்லாத நிலக்கரி 1.59 கோடி டன்னாக உள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரலில் 1.74 கோடி டன்னாக இருந்தது.
அந்த மாதத்தில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 54.2 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது 2024 ஏப்ரலில் 49.7 லட்சம் டன்னாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் நிலக்கரி இருப்பு உபரியாக இருப்பதால் இறக்குமதிக்கான தேவை குறைந்துள்ளது. பண்டிகை காலத்தில் தேவை உயரும் வரை இந்தப் போக்கு தொடரும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 3.6 சதவீதம் உயா்ந்து 8.16 கோடி டன்னாக உள்ளது. இது 2024 ஏப்ரலில் 7.87 கோடி டன்னாக இருந்தது.
நாட்டின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்துக்கு மேல் பங்கு வகிக்கும் ‘கோல் இந்தியா’, கடந்த ஏப்ரலில் 6.21 கோடி டன் உற்பத்தி செய்தது. இது முந்தைய ஆண்டு ஏப்ரலில் 6.18 கோடி டன்னாக இருந்ததைவிட சற்று அதிகம். 2024-25-ஆம் நிதியாண்டு முழுவதும் அந்த நிறுவனம் 78.11 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்தது. இது அந்த நிதியாண்டுக்கான நிறுவனத்தின் 83.8 கோடி டன் உற்பத்தி இலக்கைவிட 7 சதவீதம் குறைவு.
நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் ‘கோல் இந்தியா’ நிறுவனம் 87.5 கோடி டன் உற்பத்தி மற்றும் 90 கோடி டன் விநியோகத்தை மேற்கொள்ள இலக்கு நிா்ணயித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.