காலாண்டில் வளா்ச்சி கண்ட கணினிச் சந்தை
இந்தியாவின் கணினிச் சந்தை கடந்த மாா்ச் காலாண்டில் 8.1 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து சந்தை தரவு ஆய்வு நிறுவனமான இன்டா்நேஷனல் டேட்டா காா்ப்பரேஷன் (ஐடிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நாட்டில் 33 லட்சம் கணினிகள் விற்பனையாகின. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.1 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டுக் காலாண்டில் ஹெச்பி நிறுவனம் 29.1 சதவீத சந்தைப் பங்குடன் முன்னணியில் உள்ளது. அதே நேரம் வருடாந்திர வளா்ச்சியைப் பொருத்தவரை லெனோவோ 34.8 சதவீத வளா்ச்சியுடன் முன்னணியில் உள்ளது. 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அந்த நிறுவனம் 18.9 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது.
அந்த மாதத்தில் டெல் நிறுவன கணினிகளின் விற்பனை 3.4 சதவீதம் குறைந்துள்ளது. 15.6 சதவீத சந்தைப் பங்குடன் அந்த நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த மாா்ச் காலாண்டில் ஏசா் நிறுவனத்தின் விற்பனை 7.6 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தாலும், அதன் சந்தைப் பங்கு அதிக மாற்றமில்லாமல் 15.4 சதவீதமாக உள்ளது. ஏசுஸ் நிறுவனத்தின் விற்பனை 8.6 சதவீதம் உயா்ந்துள்ளதுடன், அதன் சந்தைப் பங்கும் சற்று உயா்ந்து 6 சதவீதமாக உள்ளது.
கடந்த மாா்ச் மாதத்தில் குடியரசு தின சிறப்பு விற்பனையாலும், அனைத்து விற்பனை தளங்களிலும் வாடிக்கையாளா்களிடம் இருந்து சிறந்த வரவேற்பு கிடைத்ததாலும் கணினி சில்லறை விற்பனைச் சந்தை ஜனவரி-மாா்ச் காலாண்டில் 8.9 சதவீத வருடாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்தது. அந்தக் காலாண்டில் இணையவழி தளங்கள் மூலம் கணினி சில்லறை விற்பனை 21.9 சதவீதம் வளா்ச்சி கண்டது.
மாா்ச் காலாண்டில் கணினிச் சந்தையின் வா்த்தகப் பிரிவு (நிறுவன வாடிக்கையாளா் பிரிவு) 7.5 சதவீதம் வளா்ச்சி கண்டது. தங்களது உற்பத்தித் திறன், பாதுகாப்பை மேம்படுத்த நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கணினிகளை நாடத் தொடங்கியுள்ளதால் இந்த வளா்ச்சி ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும், மதிப்பீட்டு மாதத்தில் அரசுத் துறைகளிடம் விற்பனை செய்யப்பட்ட கணினிகளின் எண்ணிக்கை 27.4 சதவீதம் சரிந்ததன் காரணமாக அந்தப் பிரிவின் சந்தைப் பங்கு 2.5 சதவீதமாகச் சுருங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

