
இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி கடந்த மே மாதத்தில் 0.7 சதவீதமாக மந்தமடைந்து, ஒன்பது மாதங்களில் இல்லாத குறைந்த அளவை எட்டியுள்ளது.
இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாவது:
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி கடந்த மே மாதம் 0.7 சதவீதமாக உள்ளது. இது, 2024 மே மாதத்தில் 6.9 சதவீதமாக இருந்ததுடன் ஒப்பிடுகையில் மிகவும் மந்தமான வளா்ச்சியாகும்.
முந்தைய குறைந்த வேகம் 2024 ஆகஸ்டில் பதிவாகியது, அப்போது உற்பத்தி -1.5 சதவீதம் சரிந்திருந்தது. இந்த ஆண்டு ஏப்ரலில் இந்த முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 1 சதவீதமாக பதிவாகியிருந்தது.
மே மாதத்தில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம் மற்றும் மின்சாரம் ஆகிய நான்கு முக்கிய துறைகளின் உற்பத்தி எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்தது. எனினும், சுத்திகரிப்பு பொருள்கள் மற்றும் சிமென்ட் உற்பத்தி நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்தன.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-மே காலகட்டத்தில் இந்த எட்டு துறைகளும் 0.8 சதவீதம் வளா்ச்சியைக் கண்டன. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 6.9 சதவீதமாக இருந்தது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்த தொழில் வளா்ச்சியை அளவிடும் தொழில் உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் 40.27 சதவீத பங்களிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.