நடப்பு கணக்கு உபரி ரூ.1.15 லட்சம் கோடி: ரிசா்வ் வங்கி
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு உபரி 13.5 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.1.15 லட்சம் கோடி) இருந்தது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்தது.
ஒரு நாட்டுக்கும், பிற நாடுகளுக்கும் இடையிலான பரிவா்த்தனைகளில் பணவரவைவிட செலவினம் அதிகமாக இருந்தால், அது நடப்பு கணக்குப் பற்றாக்குறையாகும். அதேவேளையில் செலவினத்தைவிட பணவரவு அதிகமாக இருந்தால் அது நடப்பு கணக்கு உபரியாகும்.
இந்தப் பணப் புழக்கத்தில் சரக்கு மற்றும் சேவைகள் வா்த்தகம் பெரும் பங்களித்தாலும், வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் அல்லது அங்கிருந்து பெறப்படும் நிதியுதவி, அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்நிலையில், ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரம்: கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு உபரி 13.5 பில்லியன் டாலா்களாகும் (சுமாா் ரூ.1.15 லட்சம் கோடி). இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதமாகும். இந்த நடப்பு கணக்கு உபரி அதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 4.6 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.39,320 கோடி) இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதமாகும்.
அதேவேளையில் வருடாந்திர அடிப்படையில், கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை 26 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.2.22 லட்சம் கோடி) இருந்தது. இது 2024-25-ஆம் நிதியாண்டில் 23.3 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.1.99 லட்சம் கோடி) குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.