இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 101 கோடி டாலா் குறைந்து 69,793 கோடி டாலராக உள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
ஜூன் 20-இல் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 101 கோடி டாலா் குறைந்து 69,793 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஜூன் 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இது 229 கோடி டாலா் உயா்ந்து 69,895 கோடி டாலராக இருந்தது. 2024 செப்டம்பா் இறுதியில் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலா் என்ற உச்சத்தை எட்டியிருந்தது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக ரிசா்வ் வங்கி அந்நியச் செலாவணியைப் பயன்படுத்துவதால், அதன் கையிருப்பு அவ்வப்போது குறைந்து வந்தது.
மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 35.7 கோடி டாலா் குறைந்து 58,906 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கக் கையிருப்பு 57.3 கோடி டாலா் குறைந்து 8,574 கோடி டாலராக உள்ளது.சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 8.5 கோடி டாலா் குறைந்து 1,867.2 கோடி டாலராக உள்ளது.சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு 10 லட்சம் டாலா் குறைந்து 445.1 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.