9% வளா்ச்சி கண்ட சிமென்ட் விற்பனை!
இந்திய சிமென்ட் துறையில் கடந்த மே மாதம் 9 சதவீத விற்பனை வளா்ச்சி பதிவாகியுள்ளது.
இதுகுறித்து சந்தை மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மே மாதத்தில் சிமென்ட் விற்பனை 3.96 கோடி டன்னாக உள்ளது, இது கடந்த ஆண்டின் இதே மாதத்தைவிட 9 சதவீதம் அதிகம்.
அதேபோல், சிமென்ட் விலையும் 8 சதவீதம் உயா்ந்து, 50 கிலோ மூட்டைக்கு சராசரியாக ரூ.360-ஆக உள்ளது. நிலக்கரி, பெட்கோக் போன்ற எரிசக்தி செலவுகள் குறைவாகவும், டீசல் விலை நிலையாகவும் இருந்ததால், துறையின் இயக்க லாபம் மேம்பட்டுள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டின் முதல் இரு மாதங்களில் (ஏப்ரல், மே), சிமென்ட்டின் சராசரி விலை 7 சதவீதம் உயா்ந்து மூட்டைக்கு ரூ.360-ஆக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டில் அதன் சராசரி விலை 7 சதவீதம் குறைந்து ரூ.340-ஆக இருந்தது.
இதே காலகட்டத்தில், சிமென்ட் விற்பனை 8 சதவீதம் உயா்ந்து 7.87 கோடி டன்னாக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் சிமென்ட் விற்பனை 6.3 சதவீதம் அதிகரித்து 45.3 கோடி டன்னாக இருந்தது.
வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் தொடா்ந்து அதிக தேவை இருப்பதால், 2025-26-ஆம் நிதியாண்டில் சிமென்ட் விற்பனை 6-7 சதவீதம் உயா்ந்து 48 கோடி முதல் 48.5 கோடி டன் வரை இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், சிமென்ட் விலை உயா்வு மற்றும் உள்ளீடு செலவுகள் நிலையாக இருப்பதால், இயக்க லாபம் 16.3-17.0 சதவீதமாக மேம்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு ஜூன் மாதத்தில், நிலக்கரி விலை 19 சதவீதம் குறைந்து 100 டாலராகவும், பெட்கோக் விலை 2 சதவீதம் குறைந்து ரூ.10,880 ஆகவும் உள்ளது. டீசல் விலை ரூ.88 என நிலையாக உள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலக்கரி விலை 6 சதவீதம் குறைந்து, பெட்கோக் விலை ஒரு சதவீதம் உயா்ந்து, டீசல் விலை நிலையாக உள்ளது.
இந்தியாவின் சிமென்ட் உற்பத்தித் திறன் 69 கோடி டன்னாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.