
ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய சேவையைப் பெறுவதற்காக எலான் மஸ்க் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்திய தொழிலதிபரான சுனில் பார்தி மிட்டலுக்குச் சொந்தமான ஏர்டெல் நிறுவனம், நாடு முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக அமெரிக்கத் தொழிலதிபரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த செயற்கைக்கோள் மூலம் நாடு முழுவதுமுள்ள கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் ஒழுங்குமுறை அனுமதிகளுக்குட்பட்டதாக உள்ளது. இதனால் இந்திய தேசிய விண்வெளி அங்கீகார மையம் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒப்புதலுக்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது.
எலுசாட் ஒன்வெப் நிறுவனத்தின் மூலம் இணைய சேவைகளை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த இணைய சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் தொலைதூர கிராமங்கள், அங்குள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனை மற்றும் தொழில் மேம்பாட்டிற்காக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையையும் ஏர்டெல் பயன்படுத்தவுள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கோபால் விட்டல் இது குறித்து பேசியதாவது,
''ஏர்டெல் நிறுவனத்துக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைந்துள்ளோம். இது நாட்டின் அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் இணைப்பு சேவைக்கு முன்மாதிரியாகவும் மைல் கல்லாகவும் இருக்கும். இதன்மூலம் தொலைதூர கிராமப் பகுதிகளுக்கும் அதிவேக இணைய சேவையை வழங்கும் இலக்கை எட்ட முடியும். இந்திய பயனர்களுக்கு குறைந்த விலையில் இணைய சேவையை வழங்கிவரும் ஏர்டெல் நிறுவனத்தின் தேவையை ஸ்டார்லிங்க் பூர்த்தி செய்து மேம்படுத்தும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | என்ன, ஆப்பிள் ஐஃபோன் 16 மாடல் வெறும் ரூ.6800க்கா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.