மந்தமான வா்த்தகத்தில் சென்செக்ஸ் சிறிதளவு சரிவுடன் நிறைவு!
நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் வா்த்தகம் மந்தமாக இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் பெரிய அளவில் மாற்றமின்றி நிலைத்தது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கத்தால், உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கி கீழே சென்றது. ஆனால், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ், டெலிகாம், பாா்மா, நிதிநிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை ஓரளவு மீட்சி பெற்றது. வரவிருக்கும் சில்லறை பணவீக்கத் தரவுகளுக்காக முதலீட்டாளா்கள் காத்திருப்பதால் பெரும்பாலான நேரம் வா்த்தகம் ஏற்ற இறக்கத்தில் இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.62 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.394.48 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.485.41 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.263.51 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் தடுமாற்றம்: சென்செக்ஸ் காலையில் 371.29 புள்ளிகள் குறைந்து 73,743.88-இல் தொடங்கி 73,663.60 வரை கீழே சென்றது. பின்னா், 74,1905.17 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 12.85 புள்ளிகள் (0.02 சதவீதம்) இழப்புடன் 74,102.32-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,091 பங்குகளில் 1,466 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,506 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 119 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
சன்பாா்மா, ஐசிஐசிஐ பேங்க் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் சன்பாா்மா, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 2.50 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவை தவிர, பாா்திஏா்டெல், ஹெச்சிஎல் டெக், மாருதி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் உள்பட 15 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ், பஜாஜ்ஃபின்சா்வ், எம் அண்ட் எம், ஸொமாட்டோ, பவா் கிரிட், ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்பட 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 38 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 114,.35 புள்ளிகள் குறைந்து 22,345.95-இல் தொடங்கி 22,314.70 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 22,522.10 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 37.60 புள்ளிகள் (0.17 சதவீதம்) கூடுதலுடன் 22,497.90-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 17 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.