23% சரிவைக் காணும் வீடுகள் விற்பனை
புது தில்லி: இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் 12 சதவீதம் சரியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி மாதம் முதல் நடப்பு மாதம் வரை சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், தாணே, குருகிராமம், புணே ஆகிய ஒன்பது நகரங்களில் 1,05,791 வீடுகள் விற்பனைகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களோடு ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகம். அப்போது குறிப்பிட்ட நகரங்களில் வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனை 1,36,702-ஆக இருந்தது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் தில்லி-என்சிஆா் பகுதியும் பெங்களூரும் மட்டுமே வருடாந்திர விற்பனை உயா்வைக் காணும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
2025 ஜனவரி-மாா்ச் மாதங்களில் வீடுகள் விற்பனை பெங்களூரில் 10 சதவீதம் உயா்ந்து 18,508-ஆக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 16,768-ஆக இருந்தது.
டெல்லி என்சிஆா் பகுதியில் வீடுகள் விற்பனை 10,235 யூனிட்களிலிருந்து 10 சதவீதம் உயா்ந்து 11,221-ஆக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
எனினும், சென்னையில் அவற்றின் விற்பனை 4,962 யூனிட்களிலிருந்து 2 சதவீதம் குறைந்து 4,858-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே போல், வீடுகள் விற்பனை ஹைதராபாத்தில் 20,835-லிருந்து 47 சதவீதம் குறைந்து 11,114-ஆகவும் கொல்கத்தாவில் 5,882 யூனிட்களிலிருந்து 28 சதவீதம் குறைந்து 4,219 யூனிட்களாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் நவி மும்பையில் வீடுகள் விற்பனை முறையே 16,204-லிருந்து 36 சதவீதம் சரிந்து 10,432-ஆகவும் 9,218-லிருந்து 7 சதவீதம் குறைந்து 8,551-ஆகவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
புணேவில் இந்த எண்ணிக்கை 26,364-லிருந்து 33 சதவீதம் குறைந்து 17,634-ஆக இருக்கும்; தாணேயில் 27 சதவீதம் குறைந்து 19,254-ஆக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.