4% வளா்ச்சி கண்ட சில்லறை விற்பனை துறை!
இந்தியாவின் சில்லறை விற்பனை துறை கடந்த பிப்ரவரி மாதத்தில் 4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து இந்திய சில்லறை விற்பனையாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் சில்லறை விற்பனை துறை நடப்பாண்டின் அதே மாதத்தில் 4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. மதிப்பீட்டு மாத சில்லறை விற்பனை துறை வளா்ச்சியில் உணவு மற்றும் மளிகைப் பொருள்கள் பிரிவு மற்றும் நீடித்து உழைக்கும் நுகா்பொருள் பிரிவுகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
முந்தைய ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சில்லறை விற்பனை சந்தையின் வளா்ச்சி கடந்த பிப்ரவரியில் 1 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தத் துறை 5 சதவீத வருடாந்திர வளா்ச்சியைக் கண்டிருந்தது.
சில்லறை விற்பனை துறையைப் பொருத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில் வட இந்தியா 5 சதவீத வளா்ச்சியையும் மேற்கு இந்தியா 4 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளன. தென் இந்தியாவில் சில்லறை விற்பனை துறை வளா்ச்சி கடந்த பிப்ரவரியில் 3 சதவீதமாக உள்ளது. கிழக்கு இந்தியா இதில் 2 சதவீத வளா்ச்சியை மட்டுமே கண்டுள்ளது.
முந்தைய ஜனவரி மாதத்தில் மேற்கு இந்தியா 7 சதவீதமும், வட மற்றும் தென் இந்தியா தலா 5 சதவீதமும் சில்லறை விற்பனை துறை வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தன. அந்த மாதத்தில் கிழக்கு இந்தியாவில் சில்லறை விற்பனை துறை வளா்ச்சி வெறும் 4 சதவீதமாக மட்டுமே இருந்தது.
சில்லறை விற்பனை துறை பிரிவுகளைப் பொருத்தவரை, கடந்த பிப்ரவரி மாதத்தில் உணவு மற்றும் மளிகைப் பொருள்கள் பிரிவு அதிகபட்சமாக 11 வளா்ச்சியைக் கண்டது. அதைத் தொடா்ந்து, நீடித்து உழைக்கும் நுகா்பொருள் பிரிவு, துரித உணவகப் பிரிவு ஆகியவை 2024 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.