நிலக்கரி இறக்குமதி மிதமாக அதிகரிப்பு
புது தில்லி: இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஜனவரி மாதத்தில் மிதமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 2.14 கோடி டன்னாக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 1.23 சதவீதம் அதிகம். அப்போது இந்தியா 2.11 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்திருந்தது.
கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி அதிக மாற்றம் இல்லாமல் 22.27 கோடி டன்னாக உள்ளது.
இந்த காலகட்டத்தில் கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1.23 கோடி டன்னாகக் குறைந்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் இந்தியா 1.34 கோடி டன் கோக்கிங் அல்லாத நிலக்கரியை இறக்குமதி செய்திருந்தது.
அதே போல், மதிப்பீட்டு காலகட்டத்தில் நாட்டின் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 4.73 கோடி டன்னிலிருந்து 4.59 கோடி டன்னாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

