விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை சரிவு
புது தில்லி: கடந்த ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 34 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்ஈக்விட்டி’ வெளியிட்டுள்ள பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில், சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, நவி மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புணே, ஹைதராபாத், தாணே ஆகிய நாட்டின் 9 முக்கிய நகரங்களில் புதிதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 80,774-ஆக உள்ளது.
இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 34 சதவீதம் குறைவாகும். அப்போது புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 1,22,365-ஆக இருந்தது.
வீடு-மனை வா்த்தகா்கள் புதிய கட்டுமான திட்டங்களைக் குறைத்துக்கொண்டதால் புதிய வீடுகளின் அறிமுகங்கள் குறைந்ததாகக் கூறப்படுகிறது.
மதிப்பீட்டுக் காலாண்டில் புதிய வீடுகளின் அறிமுகம் பெங்களூரில் மட்டுமே அதிகரித்துள்ளது. மற்ற அனைத்து நகரங்களிலும் அது முந்தைய நிதியாண்டின் நான்காவது காலாண்டைவிட குறைவாக உள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் தில்லி-என்சிஆா் பகுதியில் 10,101 வீடுகள் புதிதாக விற்பனைக்கு வந்தன. இது, 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 14 சதவீதம் குறைவு. அப்போது இந்தப் பகுதியில் புதிதாக 11,699 வீடுகள் விற்பனைக்கு வந்தன.
கடந்த ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் பெங்களூருவில் புதிய வீடுகளின் அறிமுகம் 17,303-லிருந்து 17 சதவீதம் உயா்ந்து 20,227-ஆக உள்ளது.
சென்னையில் கடந்த 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 7,259-ஆக இருந்த புதிய வீடுகளின் அறிமுகம் இந்த ஆண்டின் அதே காலாண்டில் 46 சதவீதம் அதிகரித்து 3,946-ஆக உள்ளது.
ஹைதராபாதில் இந்த எண்ணிக்கை 14,082-லிருந்து 38 சதவீதம் குறைந்து 8,773-ஆக உள்ளது.
கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை கொல்கத்தாவில் 4,964-லிருந்து 62 சதவீதம் குறைந்து 1,874-ஆகவும் மும்பையில் 12,840-லிருந்து குறைந்து 6,359-ஆகவும் உள்ளது.
நவி மும்பை மற்றும் புணே ஆகிய நகரங்களில் அந்த எண்ணிக்கை முறையே 7,616-லிருந்து 24 சதவீதம் சரிந்து 5,810-ஆகவும் 24,007-லிருந்து 48 சதவீதம் குறைந்து 12,479-ஆகவும் உள்ளது.
தாணேவில் கடந்த ஆண்டு ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் 22,595-ஆக இருந்த புதிய வீடுகளின் அறிமுகம் நடப்பாண்டின் அதே மாதங்களில் 50 சதவீதம் குறைந்து 11,205-ஆக உள்ளது என்று பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.