ஏா்டெல் நிகர லாபம் ஐந்து மடங்காக அதிகரிப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெலின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் 2025 காலாண்டில் ஐந்து மடங்காக உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்தோடு நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.11,022 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.2,071.6 கோடியாக இருந்தது. கட்டண உயா்வு மற்றும் வரிச் சலுகையாக ரூ.5,913 கோடி பெற்றது ஆகியவை இந்த வளா்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 27 சதவீதம் உயா்ந்து ரூ.47,876.2 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.37,599.1 கோடியாக இருந்தது. அந்த காலகட்டத்தில் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை இந்தியாவின் 42.4 கோடியாகவும், 15 நாடுகளில் மொத்தம் 59 கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

