32% சரிவைக் கண்ட தாவர எண்ணெய் இறக்குமதி
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி 32 சதவீதம் சரிந்து 8.91 லட்சம் டன்னாக உள்ளது.
இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் தாவர எண்ணெய் (உணவு மற்றும் உணவு அல்லாதது) இறக்குமதி 8,91,000 டன்னாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 13,18,000 டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 32 சதவீதம் குறைவாகும்.
பாமாயில் தேவை குறைவு மற்றும் உள்நாட்டு கடுகு எண்ணெய் தயாரிப்பு அதிகரித்ததால் கடந்த மூன்று மாதங்களாக இறக்குமதி குறைந்த அளவில் உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் பாமாயில் இறக்குமதி 53 சதவீதம் குறைந்து 3.21 லட்சம் டன்னாகவும், கச்சா பாமாயில் இறக்குமதி 55 சதவீதம் குறைந்து 2.41 லட்சம் டன்னாகவும் உள்ளது. மென்மையான எண்ணெய்களில், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 23.28 சதவீதம் குறைந்து 1.80 லட்சம் டன்னாகவும், சோயாபீன் எண்ணெய் 20.37 சதவீதம் குறைந்து 3.60 லட்சம் டன்னாகவும் உள்ளது.
2024 நவம்பா் முதல் 2025 ஏப்ரல் வரையிலான எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 70.69 லட்சம் டன்னிலிருந்து 65.02 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. இதில் பாமாயிலின் பங்கு 60 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாகக் குறைந்து, மென்மையான எண்ணெய்களின் பங்கு 40 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயா்ந்துள்ளது.
மே 1, 2025 நிலவரப்படி, இந்தியாவின் உணவு எண்ணெய் இருப்பு 13.51 லட்சம் டன்னாக உள்ளது. இந்தோனேசியா, மலேசியாவிலிருந்து பாமாயிலும், ஆா்ஜென்டீனா, பிரேஸில், ரஷியாவிலிருந்து சோயாபீன் எண்ணெயும், ரஷியா, உக்ரைனிலிருந்து சூரியகாந்தி எண்ணெயும் இந்தியா இறக்குமதி செய்கிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

