‘காளை’ எழுச்சி: சென்செக்ஸ் மேலும் 1,200 புள்ளிகள் உயா்வு!
இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் நிறைவடைந்தன.
உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. முதல் பாதியில் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்த சந்தையில், பிற்பகல் வா்த்தகத்தின் போது ‘காளை’ வலுவாக ஆதிக்கம் கொண்டது.
இதனால், ஆட்டோ, தனியாா் வங்கிகள், நிதிநிறுவனங்கள், மீடியா, மெட்டல், பாா்மா, ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. குறிப்பாக அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்துவது முதலீட்டாளா்கள் உற்சாகத்தை அளித்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.5.22 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.440.19 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.931.80 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.316.31 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 23.87 புள்ளிகள் கூடுதுலுடன் 81,354.43-இல் தொடங்கி அதிகபட்சமாக 80.762.16 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது 82,718.14 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,200.18 புள்ளிகள் (1.48 சதவீதம்) கூடுதலுடன் 82,530.74-இல் நிறைவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,114 பங்குகளில் 2,637 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் 1,327 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 150 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
டாடாமோட்டாா்ஸ் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் டாடாமோட்டாா்ஸ் 4.16 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஹெச்சிஎல் டெக், அதானிபோா்ட்ஸ், எடா்னா்ல், மாருதி, ரிலையன்ஸ், ஏசியன்பெயிண்ட், ஐசிஐசிஐபேங்க் உள்பட 29 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. ஆனால், இண்டஸ் இண்ட் பேங்க் மட்டும் 0.16 சதவீதம் குறைந்திருந்தது.
7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 25,000-ஐ கடந்தது நிஃப்டி!
தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வியாழக்கிழமை காலையில் 27.55 புள்ளிகள் கூடுதலுடன் 24,694.45-இல் தொடங்கி 24,494.45 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 25,116.25 வரை சென்ற நிஃப்டி, இறுதியில் 395.20 புள்ளிகள் (1.60 சதவீதம்) கூடுதலுடன் 25,062.10-இல் நிறைவடைந்தது.
நிஃப்டி கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் 25,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றுள்ளது. நிஃப்டி பட்டியலில் இண்டஸ் இண்ட் பேங்க் தவிா்த்து மற்ற 49 பங்குகளும் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

