
கடந்த 2023-24ஆம் நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் வங்கி மோசடி வழக்குகள் குறைந்துள்ளன என்று ஆர்பிஐ ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால், வங்கி மோசடி வழக்குகள்தான் குறைந்திருக்கிறதே தவிர, கடந்த நிதியாண்டைக் காட்டிலும் வங்கி மோசடி செய்யப்பட்ட தொகை மூன்று மடங்காகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. மடத்தின் தலைவரை சீருடையில் சந்தித்த ராணுவ தலைமைத் தளபதி! சமூக ஊடகங்களில் வைரல்!
2024 - 25ஆம் நிதியாண்டில், வங்கி மோசடி வழக்குகள் குறைந்திருந்தாலும், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், மோசடி செய்யப்பட்டத் தொகையானது மும்மடங்காக உயர்ந்திருப்பதாக ஆண்டு அறிக்கையில் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
ஆனால், நிதி மோசடி குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் நடைமுறை பற்றிய தீர்ப்பையடுத்தே, முந்தைய காலக்கட்டங்களில் நடைபெற்ற வழக்குகளை மறுவகைப்படுத்தல் மற்றும் புதிதாக வழக்குகளை சேர்த்தால் காரணமாக இந்தளவுக்கு மோசடித் தொகை அதிகரித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
2023-24ஆம் ஆண்டில் 36,060 வங்கி மோசடி வழக்குகள் பதிவான நிலையில், தற்போது 23,953 ஆகக் குறைந்துள்ளது. ஆனால், மோசடி செய்யப்பட்ட தொகை கடந்த ஆண்டு வெறும் 12,230 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.36,014 கோடியாக உயர்ந்துள்ளது.
மோசடிகளை வகைப்பிரிப்பதற்கு முன்பு இயற்கைநீதியின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றுவதை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கி கடந்த மார்ச் 2023 தீர்ப்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின்படி மறுபரிசீலனை செய்யப்பட்டு, இதற்கு முன்பு திரும்பப் பெறப்பட்ட 122 வழக்குகள் மீண்டும் பதிவுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதே மோசடித் தொகை அதிகரிப்புக்குக் காரணம் என்றும், இந்த வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட தொகை மட்டும் ரூ.18,674 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் மட்டும் முரண் அல்ல, வங்கிகளிலும் கூட இதே முரண் நிலவுகிறது. தனியார் வங்கிகளில் மோசடி செய்யப்பட்ட வழக்குகள் அதிகம். அதாவது 14,233 வழக்குகள். ஆனால் மோசடி தொகை 28 சதவீதம்தான். பொதுத் துறை வங்கிகளின் மோசடி வழக்கு என்னவோ 6,935 தான். மோசடித் தொகையோ 71 சதவீதம்.
2025-26 ஆம் நிதியாண்டில், மோசடிகள் மற்றும் ஒவ்வொரு வினாடியும் டிஜிட்டல் சேவையைக் கண்காணிக்கவும், நிதி நிறுவனங்களில் சைபர் பாதுகாப்புத் தன்மையை மேம்படுத்தவும், எண்ம தடயவியல் தயார்நிலை குறித்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிடவும் ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக, நிகழ்நேர டிஜிட்டல் டேஷ்போர்டுகளை வெளியிடவிருக்கிறது ரிசர்வ் வங்கி.
இதையும் படிக்க.. என்ன, ஜோதா பாய் - அக்பர் திருமணம் பொய்யா? ராஜஸ்தான் ஆளுநர் பரபரப்புப் பேச்சு!
அதாவது, பணம் திருடப்பட்டு, பிறகு, அதனை புலன் விசாரணை நடத்தி பணத்தை இழந்தவருக்கு மீட்டுக் கொடுப்பதைக் காட்டிலும், நிகழ் நேரத்தில் மோசடிகளைத் தவிர்த்து, பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என்பதே வங்கிகளின் நோக்கமாகவும் மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.