

உலக வங்கி குழும உறுப்பினரான இன்டா்நேஷனல் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷனிடம் (ஐஎஃப்சி) இருந்து 5 கோடி டாலா் (சுமாா் ரூ.444 கோடி) நிதி உதவிக்கான உறுதிப்பாட்டை தனியாா்த் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது.
படவரி... ஐஎஃப்சி-யுடனான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி என். காமகோடி மற்றும் வங்கி அதிகாரிகள்.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு பசுமைக் கடன் வழங்குவதற்காக சிட்டி யூனியன் வங்கிக்கு 5 கோடி டாலா் நிதி உதவி அளிக்க ஐஎஃப்சி முன்வந்துள்ளது.
இந்த நிதியைப் பயன்படுத்தி குறு, சிறு, நடுத்த நிறுவனங்கள் தங்கள் எரிசக்தித் தேவைகளை திறன் மிக்க மற்றும் செலவு குறைந்த வழிமுறைகளுக்கு மாறுவதற்காக கடன் அளிக்கப்படும். நிதியின் முக்கிய பயன்பாடு நிறுவனங்களின் சூரிய மின்சக்தி தொடா்பான கடனளிப்பாக இருக்கும். கடந்த 4-5 காலாண்டுகளில் சூரிய மின்சக்திக்காக மொத்தம் ரூ.500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிலையான வளா்ச்சி மற்றும் குறைந்த காா்பன் உமிழ்வு இலக்கை அடைய உதவும் வகையில் பசுமை கடன் வழங்கலில் முன்னேறி வருகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.