இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின் வாகனங்கள்! காரணம் என்ன?

இரண்டு ஆண்டுகளில் 42 சதவிகிதம் அளவுக்கு மதிப்பிழக்கும் மின் வாகனங்களுக்கான காரணம் பற்றி
மின் வாகனங்கள்
மின் வாகனங்கள்IANS
Published on
Updated on
2 min read

வாகனங்களின் எதிர்காலம் என்றால் அது மின் வாகனங்கள்தான் என்றபோதிலும் அதன் மறுவிற்பனை மதிப்பு எதிர்மறையாகவே உள்ளது.

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில், மின் கார்களின் மதிப்பு சரிவதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம், மின்சார வாகனங்களின் பேட்டரிகள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இது குறித்து லிங்க்டுஇன் சமூக தளத்தில் ஒரு வங்கியாளர் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, மின் வாகனங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளின் 42 சதவிகிதம் அதன் மதிப்பை இழந்து விடுவதாகவும், ஆனால் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் 20 சதவீதம் அளவுக்குத்தான் மதிப்பை இழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வழக்கமான வாகனங்களைக் காட்டிலும் மின் வாகனங்கள் அதிகப்படியான தேய்மானத்தைக் காட்டுவதாகவும், உங்களது மறு விற்பனை விலை மிக மோசமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரணம் என்ன?

பேட்டரியின் உறுதியற்றதன்மை முதல் காரணமாக உள்ளது. ஒரு மின்சார வாகனத்தின் மொத்த விலையில் 30 - 40 சதவிகிதம் அதன் பேட்டரிக்கான தொகையே இருக்கும். அதேவேளையில், பயன்படுத்திய வாகனங்கள் விற்கப்படும் சந்தையில், ஒரு மின்சார வாகனத்தின் பேட்டரியின் நிலைத்தன்மை குறித்து ஆராய எந்த வழிவகையும் இல்லை. பேட்டரி நல்ல நிலையில் இருக்கிறது என்று அளவிட எந்த மீட்டரும் இல்லை. காரணம், ஒவ்வொரு மின் வாகனத் தயாரிப்பாளர்களும் தங்களுக்கு என பிரத்யேக மென்பொருளைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, பேட்டரிகளின் திறனை அறிய பொதுவாக வழிகாட்டுதல்கள் இருக்கவில்லை.

ஆரம்பக் காலக்கட்டத்தில், ஸ்மார்ட் போன்களின் நிலையும் இதுவாகவே இருந்தது. பேட்டரிகளைப் பற்றி உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியாததால், பயன்படுத்திய செல்போன்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டினர்.

இதில்லாமல், மின் வாகனங்களின் புதிய மாடல்கள் தொடர்ந்து அப்டேட் ஆகிக் கொண்டே இருப்பதால், பயன்படுத்திய மின் வாகனங்களுக்கான விலை தொடர்ந்து சரிகிறது.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவோர் சந்திக்கும் பிரச்னை

கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பேட்டரிகளுக்கு வாரண்டிகளை வழங்குகின்றன. டாடா நிறுவனம் 15 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்ககிறது. ஆனால், அவை முதல் உரிமையாளருக்கு மட்டுமே.

சில கார் தயாரிப்பு நிறுவனங்கள், பேட்டரியை, கிலோ மீட்டருக்கு இவ்வளவு கட்டணம் என்ற வகையில் வாடகைக்கும் விடுகின்றன. எனவே, பயன்படுத்திய காரை வாங்கும்போது, பேட்டரி சேவை இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பயன்படுத்திய காரை வாங்கும்போது, பேட்டரிக்கான சான்றுகளை மக்கள் கேட்டுப் பெற வேண்டும் என்கிறார்கள்.

மின் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே, அவற்றை வாங்குவோர் சந்திக்கும் சில பிரச்னைகளை கவனத்தில் கொண்டு நிவர்த்தி செய்யப்பட்டால், மின் வாகன விற்பனை மேலும் சூடுபிடிக்கலாம். பயன்படுத்திய மின் வாகனங்களுக்கான மதிப்புகளும் உயரும். வாங்குவோரும் தயக்கமின்றி வாங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

Summary

About the reason electric vehicles are depreciating by 42 percent in two years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com