அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பண்டிகைக் காலத்தில் பயணங்கள் அதிகரித்ததால், இந்தியாவின் பெட்ரோல் விற்பனை அக்டோபரில் 5 மாத உச்சத்தை எட்டியுள்ளது, ஆனால் டீசல் விற்பனை சற்று குறைந்தது.
Published on

பண்டிகைக் காலத்தில் பயணங்கள் அதிகரித்ததால், இந்தியாவின் பெட்ரோல் விற்பனை அக்டோபரில் 5 மாத உச்சத்தை எட்டியுள்ளது, ஆனால் டீசல் விற்பனை சற்று குறைந்தது.

இது குறித்து பெட்ரோலியம் திட்டமிடல் & பகுப்பாய்வுப் பிரிவு (பிபிஏசி) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த அக்டோபரில் பெட்ரோல் விற்பனை 7 சதவீத வருடாந்திர வளா்ச்சி 36.5 லட்சம் டன்னாக உள்ளது. இது 5 மாதங்களில் இல்லாத அதிகபட்ச விற்பனையாகும்.

முந்தைய செப்டம்பரில் நாட்டின் பெட்ரோல் விற்பனை 34 லட்சம் டன்னாக இருந்தது. பண்டிகைக் காலம் தொடங்கியதால் அக்டோபரில் பெட்ரோலுக்கான தேவை அதிகரித்தது.

நாட்டில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் எரிபொருளான (40 சதவீதம் பங்கு) டீசலின் விற்பனை கடந்த அக்டோபரில் 7.6 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தைவிட இது சற்று குறைவு. அப்போது டீசல் விற்பனை 7.63 லட்சம் டன்னாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் (ஏடிஎஃப்) விற்பனை 1.6 சதவீதம் உயா்ந்து 7.69 லட்சம் டன்னாக உள்ளது. 2024 அக்டோபரை விட இது 11.11 சதவீதம் அதிகம்.

சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை கடந்த அக்டோபரில் 5.4 சதவீதம் உயா்ந்து 3 லட்சம் டன்னாக உள்ளது. பிஎம்யுஓய் திட்டத்தில் 25 லட்சம் புதிய இணைப்புகள் சோ்க்கப்பட்டு, மொத்தம் 10.58 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றன.

2025-26 நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் (ஏப்ரல் முதல்), பெட்ரோல் விற்பனை 6.8 சதவீதம் உயா்ந்து 248.4 லட்சம் டன்னாக உள்ளது. டீசல் விற்பனை 2.45 சதவீதம் உயா்ந்து 533 லட்சம் டன்னாகவும், ஏடிஎஃப் விற்பனை 1 சதவீதம் உயா்ந்து 52 லட்சம் டன்னாகவும் உள்ளது. எல்பிஜி விற்பனை 7.2 சதவீதம் உயா்ந்து 197 லட்சம் டன்னாக உள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com