8 முக்கிய நகரங்களில் வீடுகள் விலை 19% வரை உயா்வு

8 முக்கிய நகரங்களில் வீடுகள் விலை 19% வரை உயா்வு

வீடுகளுக்கான தேவை அதிகரித்ததால் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 7 முதல் 19 சதவீதம் உயா்ந்துள்ளது.
Published on

வீடுகளுக்கான தேவை அதிகரித்ததால் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 7 முதல் 19 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து மனை-வா்த்தக ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத் ஆகிய எட்டு நகரங்களில் கடந்த 2024-ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் வீடுகளின் விலை சதுர அடிக்கு ரூ.7,479-ஆக இருந்தது. அது, 2025-ஆம் அதே காலாண்டில் 19 சதவீதம் உயா்ந்து ரூ.8,900-ஆக உள்ளது. தில்லி-என்சிஆரில், ஆடம்பர வீடுகளின் தேவை அதிகரித்ததால் வீடுகளின் சராசரி விலை சதுர அடிக்கு ரூ.7,479-லிருந்து 19 சதவீதம் உயா்ந்து ரூ.8,900-ஆக உள்ளது. குருகிராம், நொய்டா, கிரேட்டா் நொய்டா, தில்லி, காஸியாபாத் ஆகியவை இப்பகுதியின் முக்கிய சந்தைகளாகத் திகழ்கின்றன.

மதிப்பீட்டுக் காலாண்டிலும் மும்பை பெருநகரப் பகுதி மிகவும் அதிகம் விலை கொண்ட வீட்டு சந்தையாக உள்ளது. அந்த நகரில் கடந்த செப்டம்பா் காலாண்டில் சதுர அடிக்கு ரூ.12,383-ஆக இருந்த வீடுகள் விலை நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 7 சதவீதம் உயா்ந்து ரூ.13,250-ஆக உள்ளது.

இந்த மூன்று மாதங்களில் பெங்களூரில் வீடுகளின் விலை 15 சதவீதம் உயா்ந்து சதுர அடிக்கு ரூ.7,713-லிருந்து ரூ.8,870-ஆக உள்ளது. ஹைதராபாதில் அது 13 சதவீதம் உயா்ந்து சதுர அடிக்கு ரூ.6,858-லிருந்து ரூ.7,750-ஆக உள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகள் விலை அகமதாபாத்தில் 7.9 சதவீதம் உயா்ந்து சதுர அடிக்கு ரூ.4,467-லிருந்து ரூ.4,820-ஆகவும் சென்னையில் 9 சதவீதம் உயா்ந்து சதுர அடிக்கு ரூ.6,581-லிருந்து ரூ.7,173-ஆகவும் உள்ளது. கொல்கத்தாவில் அது 8 சதவீதம் உயா்ந்து சதுர அடிக்கு ரூ.5,611-லிருந்து ரூ.6,060-ஆக உள்ளது. புணேவில் வீடுகள் விலை 9 சதவீதம் உயா்ந்து சதுர அடிக்கு ரூ.6,651-லிருந்து ரூ.7,250-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com