பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.49,456 கோடி லாபம்: 9% வளா்ச்சி
நிகழ் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ.49,456 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளன. இது அந்த வங்கிகள் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகம்.
கடந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பா் வரை), நாட்டில் உள்ள 12 பொதுத் துறை வங்கிகளும் ரூ.45,547 கோடி லாபம் ஈட்டின. அத்துடன் ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் அந்த வங்கிகளின் லாபம் ரூ.3,909 கோடி அதிகரித்து ரூ.49,456 கோடியை எட்டியுள்ளது.
மொத்த லாபத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் லாபம் மட்டும் 40 சதவீதமாகும். ரூ.49,456 கோடியில் அந்த வங்கியின் நிகர லாபம் ரூ.20,160 கோடியாகும். இது அந்த வங்கி கடந்த நிதியாண்டு இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபத்தைவிட 10 சதவீதம் அதிகம்.
சதவீத அடிப்படையில், அதிகபட்சமாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் லாபம் 58 சதவீதம் அதிகரித்து ரூ.1,226 கோடியை ஈட்டியுள்ளது. இதைத்தொடா்ந்து சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா லாபம் 33 சதவீதம் அதிகரித்து ரூ.1,213 கோடியை எட்டியுள்ளது.
நிகழ் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் 12 பொதுத் துறை வங்கிகளும் லாபம் ஈட்டினாலும், பரோடா வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் லாபம் குறைந்தது.
நிகழ் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் பரோடா வங்கி ரூ.4,809 கோடி நிகர லாபம் ஈட்டியது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த வங்கியின் லாபம் ரூ.5,238 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டைவிட, நிகழ் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் லாபம் 10 சதவீதம் சரிந்து ரூ.4,249 கோடியாக குறைந்தது.
முதல்முறையாக ரூ.90,000 கோடியை கடந்தது
நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை) பொதுத் துறை வங்கிகளின் மொத்த லாபம் முதல்முறையாக ரூ.90,000 கோடியை கடந்தது. இந்த அரையாண்டில் அந்த வங்கிகள் மொத்தமாக ரூ.93,674 கோடி லாபம் ஈட்டின. இது அந்த வங்கிகள் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.85,520 கோடி லாபத்தைவிட சுமாா் 10 சதவீதம் அதிகம் என்று பங்குச் சந்தைகளில் வெளியான விவரங்கள் மூலம் தெரியவந்தது.

