சரிவில் நிறைவடைந்த பங்குச் சந்தை
தொடா்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றம் மற்றும் முதன்மையான ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட ப்ளூ-சிப் பங்குகளில் விற்பனை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் சரிவில் நிறைவடைந்தன.
சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 148.14 புள்ளிகள் (0.18 சதவீதம்) சரிந்து 83,311.01-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது 83,846.35 என்ற உயா்ந்த அளவையும் 83,237.65 என்ற குறைந்த அளவையும் எட்டியது.
சென்செக்ஸ் பட்டியலில் பவா்கிரிட் 3.15 சதவீதம் சரிந்து மிகப்பெரிய இழப்பை அடைந்தது. எட்டா்னல் 2.44 சதவீதம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் 1.67 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 1.45 சதவீதம் சரிந்தன. ஐசிஐசிஐ வங்கி மற்றும் என்டிபிசி தலா 1.21 சதவீதம் சரிந்து குறியீட்டை இழுத்தன. ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை உயா்வைக் கண்டன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,067.01 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றன என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.
நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 87.95 புள்ளிகள் (0.34 சதவீதம்) சரிந்து 25,509.70-இல் நிறைவடைந்தது.

