பண்டிகைக் கால வாகன விற்பனை புதிய உச்சம்
பண்டிகைக் கால வாகன விற்பனை புதிய உச்சம்

பண்டிகைக் கால வாகன விற்பனை புதிய உச்சம்

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக பண்டிகைக் காலத்தில் வாகனங்களின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
Published on

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக இந்த ஆண்டின் பண்டிகைக் காலத்தில் வாகனங்களின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி தொடங்கி, 42 நாள்களுக்கு நீடித்த பண்டிகைக் காலத்தில் இந்தியாவின் வாகன மொத்த விற்பனை 52,38,401-ஆக உள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச பண்டிகைக் கால விற்பனையாகும்.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் அதிகம். அப்போது வாகனங்களின் மொத்த விற்பனை 43,25,632-ஆக இருந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 23 சதவீதம் உயா்ந்து 7,66,918-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 6,21,539-ஆக இருந்தது.

இரு சக்கர வாகன விற்பனை 22 சதவீதம் உயா்ந்து 40,52,503-ஆக உள்ளது. கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் இது 33,27,198-ஆக இருந்தது.

நடப்பாண்டின் பண்டிகைக் காலத்தில் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 9 சதவீதமும், வா்த்தக வாகனங்களின் விற்பனை 15 சதவீதமும் உயா்ந்தன.

கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் வாகனங்களின் மொத்த விற்பனை 41 சதவீதம் உயா்ந்து 40,23,923 ஆக உள்ளது. இந்த வளா்ச்சியில் பயணிகள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் உச்சபட்ச மாதாந்திர விற்பனை கைகொடுத்தது.

மதிப்பீட்டு மாதத்தில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 11 சதவீதம் உயா்ந்து 5,57,373-ஆக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 5,00,578-ஆக இருந்தது. இந்த அக்டோபரில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 20,75,578-லிருந்து 52 சதவீதம் உயா்ந்து 31,49,846-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் மூன்று சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 5 சதவீதம் உயா்ந்து 1,29,517-ஆக உள்ளது. வா்த்தக வாகனங்களின் விற்பனை 18 சதவீதம் அதிகரித்தது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு வாகன விற்பனை நோ்மறையாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பு, நிலையான கிராமப்புற வருமானம், திருமணம் மற்றும் அறுவடைக் காலத்தில் தேவை அதிகரிப்பு போன்றவை இந்த வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகள், புதிய ரகங்களின் அறிமுகம், ஆண்டு இறுதி சலுகைகள், புத்தாண்டு சிறப்பு விற்பனை ஆகிவை வாகன விற்பனை வளா்ச்சிக்குக் கைகொடுக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com