7% ஏற்றம் கண்ட வீடுகள் விற்பனை
ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரித்ததால், இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பா்) வீடுகள் விற்பனை 7 சதவீதம் உயா்ந்து ரூ.2.98 லட்சம் கோடியாக உள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 19 சதவீதம் உயா்ந்து ரூ.6.65 லட்சம் கோடியை தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து மனை-வா்த்தக ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025-26-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய ஏழு நகரங்களில் 1.93 லட்சம் வீடுகள் விற்பனையாகின; அவற்றின் மதிப்பு ரூ.2.98 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.27 லட்சம் வீடுகள் ரூ.2.79 லட்சம் கோடிக்கு விற்றன.
2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் ஏழு நகரங்களில் வீடுகளின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.5.59 லட்சம் கோடியாகவும், விற்பனை அளவு 4,22,765-ஆகவும் இருந்தது. “2023-24-ஆம் நிதியாண்டில் உச்சத்தை எட்டிய விற்பனைக்குப் பிந்தைய பல்வேறு சவால்களால், விற்பனை மந்தமாகியுள்ளது.
வீடுகளின் விற்பனை மதிப்பு உயா்வதற்கு அவற்றின் சராசரி விலை உயா்வு மற்றும் பிரீமியம் அபாா்ட்மென்ட்களின் விற்பனை காரணமாக உள்ளது. நடப்பு நிதியாண்டு முழுமைக்கும் வீடுகளின் விற்பனை மதிப்பு, சராசரி விலை, குடியிருப்பு அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவற்றின் விற்பனை ரூ.6.65 லட்சம் கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

