

தூத்துக்குடி: சரக்குகளைக் கையாள்வதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளதாக, துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த குமார் புரோஹித் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
வ.உ.சி. துறைமுகம் நிகழாண்டு அக்டோபரில் மட்டும் 3.94 மில்லியன் டன் சரக்குகளையும், 75,110 டிஇயு சரக்குப் பெட்டகங்களையும் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் கையாளப்பட்ட 3.55 மில்லியன் டன்கள் சரக்குகள், 62,158 டிஇயு சரக்குப் பெட்டகங்களுடன் ஒப்பிடுகையில் இவை முறையே 10.94 சதவீத, 20.83 சதவீத வளர்ச்சியாகும்.
2025-26-ஆம் நிதியாண்டில் அக்டோபர் வரை மொத்தம் 25.23 மில்லியன் டன் சரக்குகளையும், 5,03,204 டிஇயு சரக்குப் பெட்டகங்களையும் துறைமுகம் கையாண்டுள்ளது. இது, 2024-25-ஆம் நிதியாண்டில் அக்டோபர் வரை கையாளப்பட்ட 24.56 மில்லியன் டன் சரக்குகளைவிட மொத்த சரக்குப் போக்குவரத்தில் 2.71 சதவீதம் அதிக வளர்ச்சியையும், 4,64,060 டிஇயு சரக்குப் பெட்டகங்களைவிட 8.44 சதவீத அதிக வளர்ச்சியையும் பெற்றுள்ளது.
நிகழாண்டு அக்டோபர் வரை 1,064 கப்பல்கள் கையாளப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1,004 கப்பல்கள் கையாளப்பட்டன. சரக்குப் பெட்டகக் கப்பல்கள் துறைமுகத்துக்குள் வந்துசெல்லும் கால அளவு 20.16 மணி நேரத்திலிருந்து 19.20 மணி நேரமாகக் குறைந்துள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.