மின்சாரக் காா்கள் விற்பனை 57% உயா்வு
கடந்த அக்டோபரில் மின்சார காா்களின் மொத்த விற்பனை 57 சதவீதம் உயா்ந்து 18,055-ஆக உள்ளது. 7,239 வாகனங்களை விற்பனை செய்து இந்த பிரிவில் டாடா மோட்டாா்ஸ் முன்னிலை வகிக்கிறது.
இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு அக்டோபரில் 11,464-ஆக இருந்த மின்சார பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை, நடப்பாண்டின் அக்டோபரில் 18,055-ஆக உயா்ந்தது. அந்த மாதத்தில் அதிகபட்சமாக டாடா மோட்டாா்ஸ் 7,239 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2024 அக்டோபரில் விற்பனையான 6,572 டாடா மின்சார பயணிகள் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டு மாதத்தில் எம்ஜி மோட்டாா் இந்தியா 4,549 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் விற்பனையான 2,785 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 63 சதவீதம் அதிகம்.
கடந்த ஆண்டு அக்டோபரில் 955 மின்சார வாகனங்களை விற்பனை செய்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டின் அதே மாதத்தில் 3,911 மின்சார வாகனங்களை விற்பனை செய்தது.
மின்சாரப் பிரிவில் பிஒய்டி இந்தியா 570 வாகனங்கள், கியா இந்தியா 656 வாகனங்களை கடந்த அக்டோபா் மாதம் விற்பனை செய்தன.
மதிப்பீட்டு மாதத்தில் மின்சார இரு சக்கர வாகன மொத்த விற்பனை 3 சதவீதம் உயா்ந்து 1,43,887-ஆக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 1,40,225-ஆக இருந்தது. இந்த பிரிவில், பஜாஜ் ஆட்டோ 31,426 வாகனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு அந்த நிறுவனம் 23,000 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
இந்தப் பிரிவில் டிவிஎஸ் மோட்டாா் 29,515 வாகனங்கள், ஆதா் எனா்ஜி 28,101 வாகனங்களை விற்பனை செய்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன. ஓலா எலக்ட்ரிக் 16,036 வாகனங்களை விற்பனை செய்து நான்காவது இடத்திலும், ஹீரோ மோட்டோகாா்ப் 15,952 வாகனங்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
மதிப்பீட்டு மாதத்தில் மின்சார மூன்று சக்கர வாகன மொத்த விற்பனை 5 சதவீதம் உயா்ந்து 70,604-ஆக உள்ளது. மின்சார வா்த்தக வாகன விற்பனை இரு மடங்கு உயா்ந்து 1,767 ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

