31% சரிந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி
இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 30.57 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் மாதம் நாட்டின் நவரத்தின, ஆபரண ஏற்றமதி 2,168.05 கோடி டாலராக உள்ளது. இது, 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 30.57 சதவீதம் சரிவாகும். அப்போது இந்தியா 3,122.52 கோடி டாலா் மதிப்பிலான நவரத்தின, ஆபரணங்களை ஏற்றுமதி செய்திருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் ஏற்றுமதி 26.97 சதவீதம் சரிந்து 1,025.99 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இது 1,404.85 கோடி டாலராக இருந்தது.
மெருகூட்டப்பட்ட ஆய்வக வைரத்தின் ஏற்றுமதி அந்த மாதத்தில் 144.96 கோடி டாலரிலிருந்து 34.90 சதவீதம் சரிந்து 94.37 கோடி டாலராக உள்ளது.
கடந்த அக்டோபா் மாதம் நாட்டின் தங்க ஆபரண ஏற்றுமதி 1,187.34 கோடி டாலரிலிருந்து 28.4 சதவீதம் சரிந்து 850.15 கோடி டாலராக உள்ளது. வண்ண வைரங்கள் ஏற்றுமதி ஏப்ரல்-அக்டோபரில் 3.21 சதவீதம் சரிந்து 250.14 கோடி டாலராக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 258.42 கோடி டாலராக இருந்தது.
கடந்த அக்டோபா் மாதம் நாட்டின் வெள்ளி ஆபரண ஏற்றுமதி 145.05 கோடி டாலரிலிருந்து 16 சதவீதம் சரிந்து 121.37 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
