பரஸ்பர நிதித் திட்டங்களில் பங்கு முதலீட்டு வரவு 19% சரிவு
பரஸ்பர நிதித் திட்டங்களின் பங்கு திட்டங்களில் நிகர வரவு அக்டோபரில் 19 சதவீதம் குறைந்து ரூ.24,690 கோடியாக உள்ளது.
இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபரில் பரஸ்பர நிதித் திட்டங்களின் பங்கு திட்டங்களில் நிகர வரவு 19 சதவீதம் குறைந்து ரூ.24,690 கோடியாக உள்ளது. இது மூன்றாவது தொடா்ச்சியான மாத சரிவு. செப்டம்பரில் ரூ.30,421 கோடியாக இருந்தது. ஆகஸ்டில் 22 சதவீதம் சரிந்து ரூ.33,430 கோடியாக இருந்தது. சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக முதலீட்டாளா்கள் எச்சரிக்கையாக உள்ளதே இதற்குக் காரணம்.
முறைசாா் முதலீட்டுத் திட்டங்களில் (எஸ்ஐபி) முதலீட்டு வரவு செப்டம்பரில் உச்சமான ரூ.29,631 கோடியிலிருந்து அக்டோபரில் ரூ.29,529 கோடியாக உயா்ந்தது. சில்லறை முதலீட்டாளா்களின் விருப்பமான தளமாக இந்தப் பிரிவு தொடா்கிறது.
தங்கம் விலை உயா்வால், தங்க வா்த்தக நிதிகள் (இடிஎஃப்) ரூ.7,743 கோடி வரவைப் பெற்று, மொத்த நிா்வகிக்கும் சொத்து (ஏஆம்ஐ) ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.
அக்டோபரில் மொத்த திரும்பப் பெறப்பட்ட முதலீடு ரூ.38,920 கோடியாக உள்ளது. செப்டம்பரில் இது ரூ.35,982 கோடியாக இருந்தது. பங்கு திட்டங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி செப்டம்பரில் ரூ.66,404 கோடியிலிருந்து ரூ.63,611 கோடியாக குறைந்தது.
பங்கு திட்டங்களின் ஏஆம்ஐ அக்டோபரில் ரூ.35.16 லட்சம் கோடியாக உள்ளது. செப்டம்பரில் அது ரூ.33.68 லட்சம் கோடியாக இருந்தது.
புதிய காலாண்டு தொடக்கத்தில் கடன் திட்டங்களில் ரூ.1.59 லட்சம் கோடி வரவு உள்ளது. செப்டம்பரில் ரூ.1.01 லட்சம் கோடி முதலீடு வெளியேறியது. தங்க இடிஎஃப்கள் அக்டோபரில் ரூ.8,363 கோடியிலிருந்து ரூ.7,743 கோடி வரவாக குறைந்தது. ஏஆம்ஐ ரூ.1.02 லட்சம் கோடியாக உள்ளது.
வெள்ளி இடிஎஃப்கள் ரூ.3,000 கோடிக்கு மேல் வரவைப் பெற்று, மொத்த ஏஆம்ஐ ரூ.42,000 கோடியை தாண்டியது. என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

