ஆசியானில் இருந்து காகித இறக்குமதி 14% உயா்வு!
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பா்) ஆசியான் நாடுகளில் இருந்து காகிதம் மற்றும் காகித அட்டை இறக்குமதி 14 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து இந்திய காகித உற்பத்தியாளா்கள் சங்கம் (ஐபிஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆசியான் நாடுகளில் இருந்து காகிதம் மற்றும் காகித அட்டை இறக்குமதி கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் 2.07 லட்சம் டன்னாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகம். அப்போது இறக்குமதி 1.82 லட்சம் டன்னாக இருந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஆசியான் நாடுகளில் இருந்து இறக்குமதி 30 சதவீதத்துக்கும் மேல் கூட்டு வருடாந்திர வளா்ச்சி கண்டுள்ளது. தற்போது ஆசியான் நாடுகள் இந்தியாவின் மொத்த காகித இறக்குமதியில் 20 சதவீதத்திற்கு மேல் பங்கு வகிக்கின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

