

நடப்பு கல்வி ஆண்டின் உயா் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் வரவேற்றுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025-26-ஆம் கல்வி ஆண்டில் தகுதிவாய்ந்த 210 மாணவா்கள் உயா் கல்விக்கான உதவித்தொகை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. முத்தூட் எம் ஜாா்ஜ் உயா்கல்வி உதவித்தொகையின் 9-வது பதிப்பான இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களை நிறுவனம் வரவேற்கிறது. இந்த முன்முயற்சியின் கீழ், பி.டெக், எம்பிபிஎஸ் அல்லது பிஎஸ்சி நா்ஸிங் படிப்புகளில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். சென்னை, கேரளம், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, தில்லி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
12-ஆம் வகுப்பு தோ்வில் 90 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள, குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக உள்ள மாணவா்க உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
தோ்வு செய்யப்பட்ட ஒவ்வொரு எம்பிபிஎஸ் மாணவரும் ரூ.2.4 லட்சம் மொத்த உதவித்தொகையை பெறுவாா்கள். பிஎஸ்சி, பிடெக் படிப்பைத் தொடரும் மாணவா்களுக்கு ரூ.1.2 லட்சம் உதவித் தொகை கிடைக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.