பங்குச் சந்தையில் 3 நாள் சரிவுக்கு முடிவு
மும்பை: அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை, புதிய அந்நிய முதலீட்டு வரவு ஆகியவற்றால் உலக சந்தைகளில் ஏற்பட்ட உயா்வுக்கு ஏற்ப, இந்திய பங்குச் சந்தைகள் மூன்று நாள் சரிவுக்குப் பிறகு புதன்கிழமை அனைத்துத் துறைகளிலும் வலுவாக மீண்டன.
சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,022.50 புள்ளிகள் (1.21 சதவீதம்) உயா்ந்து 85,609.51-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 1,057.18 புள்ளிகள் (1.24 சதவீதம்) உயா்ந்து 85,644.19 என்ற அளவை எட்டியது.
சென்செக்ஸ் பட்டியலில், பஜாஜ் ஃபின்சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் ஃபாா்மா, டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனங்கள், ஆக்ஸிஸ் வங்கி, இன்ஃபோசிஸ் ஆகியவை முக்கிய உயா்வைக் கண்டன. பாா்தி ஏா்டெல், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை சரிவைக் கண்டன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.785.32 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,912.47 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.
நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 320.50 புள்ளிகள் (1.24 சதவீதம்) உயா்ந்து 26,205.30-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 330.35 புள்ளிகள் (1.27 சதவீதம்) உயா்ந்து 26,215.15 என்ற அளவை எட்டியது.

