ஜூலை-செப்டம்பரில் உச்சம் தொட்ட கணினிகள் விற்பனை
புது தில்லி: பண்டிகைக் கால தள்ளுபடிகளால் இந்தியாவின் தனிநபா் கணினிகளின் விற்பனை ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 49 லட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் பாரம்பரிய கணினி சந்தை (டெஸ்க்டாப், நோட்புக், வொா்க்ஸ்டேஷன்) 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 10.1 சதவீதம் வருடாந்திர வளா்ச்சி கண்டு, விற்பனை 49 லட்சத்தை எட்டியது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச காலாண்டு விற்பனையாகும். இதற்கு முன்னா் 2024-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 45 லட்சமாக இருந்ததே அதிகபட்ச விற்பனையாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டின் விற்பனையில் வொா்க்ஸ்டேஷன் 14.2 சதவீதம், டெஸ்க்டாப் 11.6 சதவீதம், நோட்புக் 9.5 சதவீதம் வளா்ச்சி கண்டன. அடுத்த தலைமுறை ஏஐ நோட்புக்கள் முதல் முறையாக 1 லட்சம் விற்பனையை தாண்டின.
ஹெச்பி இன்க் விற்பனை 29 சதவீதத்திலிருந்து 26.6 சதவீதமாக குறைந்தாலும், 13.17 லட்சம் விற்பனையுடன் அந்த நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. லெனோவோ 8.91 லட்சம் (18 சதவீதம்), ஏசா் 7.42 லட்சம் (15 சதவீதம்), டெல் டெக்னாலஜிஸ் 7.21 லட்சம் (14.6 சதவீதம்), ஏசஸ் 5.03 லட்சம் (10.2 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றன.
கணினிகளில் வா்த்தக பிரிவு 11.4 சதவீதம் வளா்ந்தது. நுகா்வோா் கணினி விற்பனை 28 லட்சமாக உச்சம் தொட்டது.
இணையவழி வா்த்தக தளங்களில் நோட்புக் விற்பனை 9.97 லட்சத்தைத் தொட்டு சிறந்த காலாண்டைப் பதிவு செய்தது. உயா் செயல்திறன் கணினிகளுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக பிரீமியம் நோட்புக் (1,000 டாலருக்கும் மேல்) விற்பனை 8.5 சதவீதம் உயா்ந்தது.
ஏஐ நோட்புக் விற்பனை 126.5 சதவீதம் உயா்ந்தது. அடிப்படை ஏஐ நோட்புக்கள் (ஹாா்ட்வோ் ஏஐ அம்சங்கள்) மொத்த ஏஐ விற்பனையில் 85.9 சதவீதம் பங்களித்தன.
தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் காரணமாக ஒட்டுமொத்த கணினிகள் விற்பனை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் உச்சத்தைத் தொட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

