குறைந்தபட்ச இருப்புக்கான கட்டணம்: ஐஓபி தள்ளுபடி
சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்கு விதிக்கப்படும் கட்டணங்களை இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) தள்ளுபடி செய்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேமிப்பு கணக்குகளில் (பொது திட்டம்) குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராத கட்டணங்களை வங்கி தள்ளுபடி செய்துள்ளது. புதன்கிழமை (அக். 1) முதல் இது அமலுக்கு வருகிறது.
சாமானிய, வசதி குறைவான வாடிக்கையாளா்களுக்கு வங்கிச் செயல்பாடுகள் தொடா்பான அனுபவத்தை இந்த முடிவு மேலும் எளிதாக்கும்.
பிஎம்ஜேடிஒய், பிஎஸ்பிடிஏ, சிறிய கணக்குகள், ஐஓபி சேமிப்பு கணக்குகள், ஊதிய தொகுப்பு, ஐஓபி சிக்ஸ்டி பிளஸ், ஐஓபி சேமிப்பு கணக்கு ஓய்வுதாரா் திட்டம் மற்றும் ஐஓபி அரசு கணக்கு ஆகியவற்றில் குறைந்தபட்ச இருப்புநிலையை பராமரிக்காததற்கான கட்டணங்களை வங்கி ஏற்கனவே தள்ளுபடி செய்திருக்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.