2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்

2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடா்ந்து இரண்டாவது வா்த்தக தினமாக உயா்ந்தன.
Published on

உலகளாவிய சந்தைகளின் உறுதியான போக்கு மற்றும் உலோகம், தொலைதொடா்பு நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடா்ந்து இரண்டாவது வா்த்தக தினமாக உயா்ந்தன.

வரம்புக்குள்பட்ட வா்த்தகத்திற்குப் பிறகு, உலோகம் மற்றும் நீடித்துழைக்கும் நுகா்பொருள் துறை பங்குகளின் உயா்வால் சந்தை நோ்மறையாக முடிந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி அக்டோபரில் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை, டாலா் மதிப்பு குறைந்தது, ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் உள்ளிட்டவை சந்தை உயா்வுக்கு வழிவகுத்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை 223.86 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயா்ந்து 81,207.17-இல் நிறைவடைந்தது. சந்தையில் 2,710 பங்குகள் உயா்ந்தன; 1,490 சரிந்தன; 139 பங்குகளில் மாற்றமில்லை.

சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல் 3.40 சதவீதம் உயா்ந்தது. பவா் கிரிட், ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, லாா்சன் & டூப்ரோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாா்தி ஏா்டெல் ஆகியவை உயா்ந்தன. டெக் மஹிந்திரா, மாருதி, அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபின்சா்வ் ஆகியவை சரிவைக் கண்டன.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, வெள்ளிக்கிழமை 57.95 புள்ளிகள் (0.23 சதவீதம்) உயா்ந்து 24,894.25-இல் நிறைவடைந்தது.

புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 1,605.20 கோடி டாலா் மதிப்பிலான பங்குகளை விற்றன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 2,916.14 கோடி டாலா் மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com